search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
    X
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    மாநகராட்சி-நகராட்சிக்கு விரைவில் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையர்

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27, 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.

    ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கோயம்பேடு அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 91,975 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    இதில் 18 ஆயிரத்து 570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீத முள்ள பதவிகளுக்கு நடந்த தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவில் 77.10 சதவீதமும், 2-வது கட்ட வாக்குப் பதிவில் 77.73 சதவீதமும் வாக்கு பதிவானது.

    மொத்தம் 77.46 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது. 315 மையங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் 95 சதவீதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

    மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், கே.பெரியப்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண்-2, திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியம், செருகூடி கிராம ஊராட்சி வார்டு எண்.1, வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், சென்னாகரம் கிராம ஊராட்சி வார்டு எண்.1 ஆகியவற்றில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இறந்ததால் அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் 23.12.2019-ல் வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் 25 பதவி இடங்களுக்கு ஒட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

    தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டதும் இந்த வாக்குகள் விரைவில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், தலைவர்கள் வருகிற 6-ந் தேதி காலை 10 மணிக்கு பதவி ஏற்று கொள்வார்கள். தேர்தல் தொடர்பாக டிசம்பர் 1-ந்தேதி முதல் இன்று வரை 712 புகார் மனுக்களும், தொலைபேசி மூலம் 1082 புகார்களும் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை அமைதியாகவும், நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டனர்.

    அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் பல்வேறு கேள்விகள், சந்தேகங்களை எழுப்பினார்கள். இவைகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்டன. அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேள்வி:- தேர்தலை நேர்மையாக நடத்தாமல் பாரபட்சமாக நடத்துவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறி இருக்கிறாரே?

    பதில்:- தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்த அனைத்து புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், புகார் தெரிவித்தவர்களுக்கும் உரிய பதில்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலையும் இப்போது நடந்துள்ள உள்ளாட்சி தேர்தலையும் நீங்களே ஒப்பிட்டு பார்த்தாலே எல்லோருக்கும் புரியும். அப்போது நடந்த தேர்தலை விட தற்போது நடந்த தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடந்துள்ளது.

    கேள்வி:- கரூர், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்களே?

    பதில்:- 100 சதவீதம் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. விதிமீறல் தொடர்பாக புகார் வந்தால் அதனை வீடியோ பதிவுகள் மூலம் கண்டறிந்து அதன் விளக்கங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்.

    கேள்வி:- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும்?

    பதில்:- விரைவில் தேர்தலை நடத்துவோம்.

    கேள்வி:- வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதே?

    பதில்:- வாக்காளர் பட்டியலை நாங்கள் தயாரிக்க வில்லை. இந்திய தேர்தல் ஆணையம் பயன்படுத்திய வாக்காளர் பட்டியலைதான் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தி இருக்கிறோம். இது சம்பந்தமாக வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த அக்டோபர் மாதமே வெளியிட்டு இருந்தோம்.

    கேள்வி:- தள்ளி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் எப்போது தேர்தல் நடத்தப்படும்?

    பதில்:- இந்த மாவட்டங்களில் வழிமுறைகள் சட்டப் பூர்வமாக செய்யப்பட வேண்டி உள்ளதால் அது முடிந்ததும் தேர்தல் நடத்தப்படும்.

    கேள்வி:- ஓட்டு எண்ணிக்கையின்போது பல இடங்களில் குளறுபடி நடந்ததாக புகார்கள் தெரிவித்துள்ளார்களே?

    பதில்:- உண்மையிலேயே குளறுபடி நடந்து இருந்தால் அதற்குரிய தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்யும்.

    கேள்வி:- அரசியல் கட்சி பிரதிநிதிகள் உங்களை பற்றியும் குறை கூறி இருந்தார்களே?

    பதில்:- அரசியல் கட்சியினர் சொன்ன புகார்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொண்டு நேர்மையாக தேர்தலை நடத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×