search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா தண்ணீர்
    X
    கிருஷ்ணா தண்ணீர்

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் இந்த மாதம் இறுதி வரை கிடைக்கும்

    கண்டலேறு அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் இந்த மாதம் இறுதி வரை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    ஏரிக்கு தொடர்ந்து 550 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    ஏரியில் 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 1497 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் சோமசீலா, கண்டலேறு அணையில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது. இதேபோல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டபோது ஆந்திர விவசாயிகள் தண்ணீரை எடுத்து சேமித்து கொண்டனர்.

    இதனால் ஆந்திராவில் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் போதுமான அளவு இருப்பு உள்ளது. எனவே கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து தடையின்றி பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

    கண்டலேறு அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் இந்த மாதம் இறுதி வரை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 3607 மில்லியன் கன அடி தண்ணீர் (3½ டி.எம்.சி.) கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே பூண்டி ஏரி மற்றும் கிருஷ்ணா கால்வாய் பகுதிகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கிருஷ்ணா கால்வாய் பகுதிகளில் இரும்பு வேலிகள் அமைக்க முடிவு செய்து உள்ளனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 5535 மில்லியன் கனஅடி (மொத்த கொள்ளளவு 11257 மில்லியன் கன அடி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது 49 சதவீதமாகும். இந்த தண்ணீரை கொண்டு அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் கட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×