search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெயிண்டர்
    X
    பெயிண்டர்

    ஏரல் அருகே காரில் கடத்தி பெயிண்டர் அடித்துக்கொலை - 2 பேர் கைது

    ஏரல் அருகே கடனை திருப்பி தராததால், காரில் கடத்தி பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 43). பெயிண்டரான இவர் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெயிண்டு அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி வஹிதா பானு. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சாகுல் ஹமீது தொழில் வி‌‌ஷயமாக சிலரிடம் கடன் வாங்கியதாகவும், பின்னர் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சாகுல் ஹமீதுக்கு கடன் கொடுத்தவர்கள், அவரிடம் அடிக்கடி கடனை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காலையில் சாகுல் ஹமீது தனது வீட்டில் இருந்தார். அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சாகுல் ஹமீதுவிடம் கடனை திருப்பி தருமாறு கேட்டனர். ஆனால், அவரிடம் பணம் இல்லாததால், அவரை காரில் கடத்தி சென்றனர். பின்னர் காரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு மாலையில் சாகுல் ஹமீதுவை அவரது வீட்டின் முன்பு காரில் இருந்து இறக்கி விட்டு சென்றனர். இதில் சாகுல் ஹமீதுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த 18-ந்தேதி காலையில் சாகுல் ஹமீதுவை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாகுல் ஹமீதுவின் தம்பி வாஹித், ஏரல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கண்ணன், அருண் பிரின்ஸ், ஆறுமுகநயினார், நாசரேத்தைச் சேர்ந்த ஜான், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த முத்துபாண்டி (28), ஏரல் அருகே திருவழுதிநாடார்விளையைச் சேர்ந்த சோமசுந்தரம் (46) ஆகிய 6 பேரும் சேர்ந்து சாகுல் ஹமீதுவை காரில் கடத்தி சென்று தாக்கியது தெரியவந்தது.

    இதுதொடர்பாக முத்துபாண்டி, சோமசுந்தரம் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளியான கண்ணன் உள்ளிட்ட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஏரல் அருகே கடனை திருப்பி தராததால், பெயிண்டரை காரில் கடத்தி சென்று அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×