search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் வாக்குப்பதிவு (கோப்புப்படம்)
    X
    தேர்தல் வாக்குப்பதிவு (கோப்புப்படம்)

    உள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது

    தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான புதிய அட்டவணை வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என தெரிகிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அதில் 6-ந்தேதி (நேற்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ந்தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு சில மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

    புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வார்டு வரையறை பணிகள் நடைபெறாததால் பிரிக்கப்படாத பழைய மாவட்டத்தின் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதை எதிர்த்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு பணிகள் முடிந்த பிறகுதான் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உடனே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

    இதற்காக பழைய தேர்தல் அட்டவணையை ரத்து செய்வதாகவும், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளதாகவும் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

    இதனால் நேற்று நடைபெற இருந்த வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளும் திரும்ப பெறப்பட்டனர்.

    நேற்று காலையில் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளாட்சி உயர் அமைப்பு அதிகாரிகளை அழைத்து தீவிர ஆலாசனை நடத்தினார்கள்.

    9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உடனே தேர்தல் நடத்தலாமா? அல்லது 9 மாவட்டங்களிலும் வார்டு வரையறை பணிகளை முடித்த பிறகு ஒட்டு மொத்தமாக சேர்த்து தேர்தல் நடத்தலாமா? என்று ஆலோசித்தனர். இதில் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

    இதனால் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், சட்ட வல்லுனர்களுடன் தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    மாநில தேர்தல் ஆணையம்

    கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசித்தனர்.

    புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனியாக தேர்தல் நடத்துவதா? அல்லது அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் வகையில் வார்டு வரையறை செய்து ஜனவரி மாதம் தேர்தல் நடத்தலாமா? என்பது பற்றியும் விரிவாக விவாதித்தனர்.

    இதில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவது தான் எளிய வழி என்றும் கருத்து தெரிவித்தனர்.

    எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய தேர்தல் தேதி வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என தெரிகிறது.

    இது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த வழிகாட்டுதல்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாகவும், விரைவில் தேர்தலுக்கான தேதி விவரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    இதுபற்றி சட்ட வல்லுனர்கள் கூறுகையில் பழைய தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிதாகதான் அட்டவணையை வெளியிட வேண்டும்.

    இதற்கு குறைந்த பட்சம் 35 நாட்கள் கால அவகாசம் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மாதம் தேர்தல் நடத்த முடியாது. ஜனவரி மாதம்தான் தேர்தல் நடத்த முடியும். அனேகமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×