search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
    X
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    பஞ்சாயத்துகளுக்கு முதல் கட்டம் - மாநகராட்சி, நகராட்சிகளுக்கு 2வது கட்டமாக தேர்தல்

    பஞ்சாயத்து, ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாகவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 2-வது கட்டமாகவும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த முற்பட்டபோது இட ஒதுக்கீடு சரிவர கொண்டு வரப்படவில்லை என்று ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதனால் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் கூட்டத்தை கூட்டி மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கருத்துக்கள் கேட்டார். அப்போது உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள்.

    ஓட்டுச் சீட்டுக்கு பதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    உள்ளாட்சி தேர்தல் தேதியை வருகிற திங்கட்கிழமை (2-ந்தேதி) மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பஞ்சாயத்து, ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 31-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க திட்டமிட்டப்பட்டது.

    இதன்பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஜனவரி 20-ந்தேதிக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும்.

    தமிழ்நாட்டில் இப்போது 15 மாநகராட்சிகள் உள்ளன. இதில் புதிதாக ஓசூர், நாகர்கோவில், ஆவடி மாநகராட்சிகள் உருவாகி உள்ளதால் மாநகராட்சி உறுப்பினர் பதவி இடங்கள் 1,064 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனால் நகராட்சிகளின் எண்ணிக்கை 148-ல் இருந்து 121 ஆக குறைந்துள்ளதால் நகர்மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 3,468 ஆக குறைந்துள்ளது. எந்தெந்த பதவிகளுக்கு நேரடி தேர்தல், முறைமுக தேர்தல் என்ற பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    நேர்முக தேர்தல்

    மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி - 1,064
    நகராட்சி உறுப்பினர்கள் பதவி - 3,468
    பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி - 8,288
    ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 6,471
    மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 655
    கிராம ஊராட்சி தலைவர் - 12,524
    கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 99,324
    மொத்தம் - 1,31,794

    மறைமுக தேர்தல்

    மாநகராட்சி மேயர் - 15
    நகராட்சி தலைவர் - 121
    பேரூராட்சி தலைவர் - 528
    ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் - 388
    மாவட்ட ஊராட்சி தலைவர் - 31
    மொத்தம் - 1,083

    தற்போது புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் உதயமாகி உள்ளது.

    ஆனால் இந்த 5 மாவட்டங்களுக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி நடத்தப்படாது ஒருங்கிணைந்த பழைய மாவட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    திமுக

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. மொத்தம் 6 வழக்குகள் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

    இதில் கோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பிக்கப்போகிறது என்பதை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
    Next Story
    ×