search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கு விடுமுறை விடப்படாததால் மாணவ-மாணவிகள் குடைபிடித்தபடி பள்ளிக்கு சென்ற காட்சி
    X
    பள்ளிக்கு விடுமுறை விடப்படாததால் மாணவ-மாணவிகள் குடைபிடித்தபடி பள்ளிக்கு சென்ற காட்சி

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை - நனைந்தபடி பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள்

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், மழையில் நனைந்தபடியே சென்றனர்.
    கூடலூர்:

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது.

    வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவு சாரலாக தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி, கூடலூர், கம்பம், லோயர் கேம்ப் உள்ளிட்ட இடங்களில் காலை வரை மழை தொடர்ந்தது.

    இதனால் மலைச்சாலையில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

    திண்டுக்கல்லில் சாரல் மழையே பெய்தது. ஆனால் மாவட்டத்தில் பிற பகுதிகளான வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம், அய்யலூர், வடமதுரை, ஒட்டன்சத்திரம், பழனி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை வரை மழை தொடர்ந்து பெய்தது. இதனால் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.

    பல வருடங்களுக்கு பிறகு பருவமழை ஓரளவு தொடர்ந்து பெய்வதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிலக்கோட்டை முத்துலிங்கபுரம், மட்டபாறை ஆகிய பகுதிகளில் நெல்நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வேளாண் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கொடைக்கானலிலும் தொடர்ந்து பெய்த மழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் மழை காலை நேரத்திலும் பெய்த போதிலும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், மழையில் நனைந்தபடியே சென்றனர். குறிப்பாக வத்தலக்குண்டு பகுதியில் நிழற்குடை இல்லாததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 128.25 அடியாக உள்ளது. 1027 கன அடி நீர் வருகிறது. 1650 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 64.37 அடியாக உள்ளது. 2083 கன அடி நீர் வருகிற நிலையில் 2390 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 51.40 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.44 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 78 கன அடியாக உள்ளது.

    தேக்கடி 3.4, கூடலூர் 2.6, சண்முகா நதி அணை 1, உத்தமபாளையம் 2, வீரபாண்டி 12.6, வைகை அணை 7.2, மஞ்சளாறு 11, கொடைக்கானல் 9.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
    Next Story
    ×