search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்
    X
    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

    சென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதம் வாபஸ்

    கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவருடைய தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தரப்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில், மாணவி மரணம் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் உள் விசாரணை நடத்த வேண்டும் உள்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள ‘சிந்தா பார்’ என்ற மாணவர் அமைப்பு சார்பில் ஜஸ்டின் ஜோசப், அசார் மொய்தீன் ஆகிய 2 மாணவர்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர்.

    அவர்கள் நேற்றும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்களும் உடனிருந்தனர்.

    இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்த மாணவர்களுடன் ஐ.ஐ.டி. ‘டீன்’ சிவகுமார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றதாக மாணவர்கள் அறிவித்தனர்.

    இதுகுறித்து உண்ணாவிரதம் இருந்த அசார் மொய்தீன் கூறியதாவது:-

    ஐ.ஐ.டி. மாணவர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும், ஐ.ஐ.டி. வளாகத்தில் குறைதீர்க்கும் குழு ஏற்படுத்த வேண்டும், மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக ஐ.ஐ.டி. நிர்வாகம் உள் விசாரணை நடத்த வேண்டும் என 3 கோரிக்கைகளை முன்வைத்து இருந்தோம்.

    அதில் முதல் 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளனர். மாணவி மரணம் தொடர்பாக உள்விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.ஐ.டி. இயக்குனரிடம் ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக கூறினர். எனவே நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.

    அதற்கு சரியான பதில் கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை கையில் எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×