
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இரவு திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது கோவிலின் பூட்டை மர்ம நபர் உடைத்து கொண்டிருந்தார். இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அந்த நபரை பொதுமக்கள் விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது அவர் கற்களால் தாக்கினார். இதையடுத்து மர்ம நபர் தனது மோட்டார் சைக்கிளை விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம நபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாகனம் கர்நாடக பதிவு எண் கொண்டது. மேலும் அந்த வாகனத்தின் உரிமையாளர் பெரியபுது கோட்டை பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இரவு நேரங்களில் தேன்கனிக்கோட்டை பகுதியில் மர்ம நபர் வீடு மற்றும் கோவில்களின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு இரவு நேரங்களில் ரோந்து பணியை போலீசார் தீவிரபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.