search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தபோது எடுத்த படம்.
    X
    பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தபோது எடுத்த படம்.

    குன்னம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்

    அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிழுமத்தூர் கிராம மக்கள் குன்னம் தாலுகா அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் கிராம எல்லைக்கு உட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கூடாது என கடந்த 4-ந் தேதி கிழுமத்தூர் கிராம பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அதேபோல் கடந்த 6-ந் தேதி கிழுமத்தூர் கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்க வருகை தந்த மாவட்ட வருவாய் நிர்வாகத்தினரை வழிமறித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கிராமத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, சமுதாயக்கூடம், மாணவர் விடுதி நெல் கொள்முதல் நிலையம், பாலிடெக்னிக் கல்லூரி அமைத்து தரக்கோரியும் கோரிக்கை விடுத்து இருந்தனர். மேலும் 14-ந் தேதி (அதாவது நேற்று) உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என அறிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து நேற்று குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிழுமத்தூர் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு கிழுமத்தூர் கிராம முக்கியஸ்தர் செல்லமுத்து தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் கிழுமத்தூர் அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கூடாது எனவும் கிராம வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினர். தகவலறிந்த குன்னம் தாசில்தார் சித்ரா, மண்டல துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம், குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் கதிர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தை முடிவில், கிழுமத்தூரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டோம். இதை தங்களுக்கு எழுத்து பூர்வமாகவும் எழுதி தருகிறோம் என தாசில்தார் சித்ரா உறுதி அளித்தார். அதன்பேரில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். உண்ணாவிரத போராட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. முன்னதாக கிழுமத்தூர் கிராம மக்கள் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கிழுமத்தூர் கிராம மக்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், இளைஞர் விளையாட்டு மன்றம் மற்றும் விவசாய சங்கம் ஆகியவை கலந்து கொண்டன. இந்த உண்ணாவிரத போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×