search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன்
    X
    தினகரன்

    சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் - தினகரன்

    சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    தர்மபுரி:

    பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தபிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் கூறியதாவது:-

    சசிகலா சட்டப்படி சிறையில் இருந்து வெளிவர எல்லா தகுதிகளும் உள்ளன. அனைத்து கைதிகளுக்கும் நடைமுறை ஒன்றுதான். பெங்களூரு சிறை விதிப்படிதான் சசிகலா ஆடை அணிந்து உள்ளார்.

    சசிகலா, சட்டப்படி வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். சிறை விதிகளை அவர் மீறியதாக பல பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆனால் வினய்குமார் தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலா பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. சசிகலா மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. தீபாவளிக்கு சசிகலா வெளியே வருவார் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்த விசாரணை தேர்தல் கமி‌ஷனில் முடிவடைந்து உள்ளது. விரைவில் பதிவு எண் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும்.

    சசிகலா

    பண பலத்தாலும், தி.மு.க.வின் திறமையின்மையின் காரணமாகவும் நடைபெற்ற 2 இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வென்றுள்ளதை இமாலய வெற்றி என்று கூற முடியாது.

    இடைத்தேர்தலில் வாக்களிப்பதால் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்பதால் தற்போது அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து உள்ளனர். இது எந்த தேர்தலுக்கான முன்னோட்டமும் கிடையாது. இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த முடிவு தான்.

    முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக இருந்தால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகழேந்தியின் பேச்சும், நடவடிக்கைகளும் 24-ம் புலிகேசியை ஞாபகப்படுத்துகிறது. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள டாக்டர்களை அழைத்து பேசி அவர்களது பிரச்சினைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×