search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    SETC முன்பதிவு மையம்
    X
    SETC முன்பதிவு மையம்

    தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவு 24-ந்தேதி தொடங்குகிறது

    தீபாவளி சிறப்பு பஸ்களுக்கான ‘டிக்கெட்’ முன்பதிவு 24-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக 30 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    சென்னை :

    தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து வழக்கமான பஸ்கள், சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10,940 பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தினமும் இயக்கப்படும் தலா 2,225 பஸ்களுடன் கூடுதலாக 3 நாட்களும் 4,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதாவது 3 நாட்களும் மொத்தம் 10,940 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல் பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பஸ்களும், திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் நெல்லை ஆகிய இடங்களுக்கு முறையே 1,165 மற்றும் 920 பஸ்களும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர் சென்னை, கரூர், திருச்சி, நெல்லை ஆகிய இடங்களுக்கு 251 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சிறப்பு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு கவுண்ட்டர்களும், தாம்பரம் மெப்சில் 2 சிறப்பு கவுண்ட்டர்களும், பூந்தமல்லி, மாதவரம் பஸ் நிலையங்களில் தலா ஒரு சிறப்பு கவுண்ட்டர்களும் என மொத்தம் 30 சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவு 24-ந்தேதி தொடங்குகிறது

    போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருகிற 24-ந் தேதி இந்த சிறப்பு கவுண்ட்டர்களை திறந்து வைத்து ‘டிக்கெட்’ முன்பதிவை தொடங்கிவைக்கிறார்.

    கடந்த ஆண்டுகளை போன்று 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் பயணிகள் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com, www.goibibo.com ஆகிய இணையதளங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தீபாவளி பண்டிகையையொட்டி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுக்கு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 43,635 பயணிகளும், பிற ஊர்களில் இருந்து மற்ற ஊர்களுக்கு 23,138 பயணிகளும் என மொத்தம் 66,773 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் ‘டிக்கெட்’ கட்டணமாக ரூ.3 கோடியே 26 லட்சம் வசூலாகி உள்ளது.

    தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக 27-ந் தேதி முதல் 30-ந் தேதி (4 நாட்கள்) வரை தினந்தோறும் இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் 4,627 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 13,527 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

    அதேபோன்று பிற ஊர்களில் இருந்து மற்ற ஊர்களுக்கு 8,637 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×