search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் பேத்துப்பாறையில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் பாதையை கடக்கும் கிராம மக்கள்
    X
    கொடைக்கானல் பேத்துப்பாறையில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் பாதையை கடக்கும் கிராம மக்கள்

    கொடைக்கானலில் தொடர் மழை - ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் கயிறு கட்டி கடந்த மக்கள்

    கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து கயிறு கட்டி ஆபத்தான முறையில் மக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    கொடைக்கானலில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே அவ்வப்போது கன மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கம் மற்றும் மனோரஞ்சிதம் அணையிலும் தண்ணீர் குறைந்து காணப்பட்ட நிலையில் குடிநீர் தேக்கத்தின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. தற்போது பெய்து வரும் மழையினால் 2 அணைகளிலும் தண்ணீர் நிரம்பி வருவதால் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு கொடைக்கானலில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகள், நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேத்துப்பாறை கிராமத்தில் உள்ள சிறிய ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் விவசாயிகள் விளை பொருட்களை தலைச்சுமையாக எடுத்து வந்து மரத்தில் கட்டப்பட்ட கயிறு மூலம் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர்.

    எனவே பேத்துப்பாறை ஆற்றின் குறுக்கே ஒரு சிறிய நடைபாலம் அமைக்க வேண்டும்என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கன மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் இப்பகுதி மக்கள் தீராத சோகத்தை சந்தித்து வருகின்றனர்.

    கொடைக்கானல் ஏரிச்சாலையை சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.

    தொடர் மழையால் செண்பகனூர் பகுதியில் கொய்யாபாறை என்ற இடத்தில் அருளம்மாள் என்பவரது வீடும், தைக்கால் பகுதியில் ஜான் என்பவரது வீடும் சேதம் அடைந்தன. மேலும் அதே பகுதியை சேர்ந்த 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது. செண்பகனூர்-பிரகாசபுரம் சாலையில் மழை நீர் அதிகமாக சென்றதால் அங்குள்ள விநாயகர் ஓடைப்பகுதிக்கு செல்லும் வழியில் மணல் மேடாகி அடைப்பு ஏற்பட்டுள்ளது.

    குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் சென்றதாலும் மக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர். இருதயபுரம், அட்டக்கடி ஆகிய பகுதிகளில் மழை நீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அதிகாரிகள் யாரும் வராததால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    கொடைக்கானல் தாசில்தார் வில்சன் கூறுகையில், கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும், பகுதி சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.4200 வீதம் நிவாரண தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நிவாரண உதவிகள் பெறலாம் என்றார்.
    Next Story
    ×