search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    எம்.எல்.ஏ. சகோதரரிடம் கைவரிசை காட்டிய திருடன் கைது

    எம்.எல்.ஏ. சகோதரரிடம் கைவரிசை காட்டிய திருடனை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை சர்வேயர் காலனி, யமுனா தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 45). கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவர் சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கத்தின் சகோதரர் ஆவார்.

    முனியசாமி கடந்த 12-ந் தேதி மதியம் காரில் அண்ணாநகர் மெயின் ரோட்டுக்கு சென்றார். அங்கு காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள அலுவலகத்துக்கு சென்றார்.

    அந்த நேரத்தில் யாரோ மர்ம நபர் முனியசாமி காருக்குள் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம், கையெழுத்து போட்ட காசோலை புத்தகங்கள் ஆகியவை இருந்த சூட்கேசை திருடிச் சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் முனியசாமி சூட்கேசை திருடிய நபரை உடனடியாக கைது செய்ய மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.

    மாநகர குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் செந்தில் குமார் மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் வினோஜி, இன்ஸ் பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ் பெக்டர்கள் செந்தில் குமார், சுப்பிரமணி, பன்னீர் செல்வம், ஏட்டு செந்தில் பாண்டி, போலீஸ் காரர் கோபி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் அண்ணாநகர் மெயின் ரோட்டில் சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவுகைளை ஆய்வு செய்தனர். அப்போது முனியசாமி கார் டிரைவர் இளையராஜாவிடம் ஒருவர் பேச்சு கொடுத்தபடி சூட்கேசை திருடிச் செல்வது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் குற்றவாளிகள் போட்டோவுடன் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    அப்போது மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு வரை தனிப்படை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில், அவர் பெயர் ஆபிரகாம் ஐசக் (50), ராம்ஜி நகர், திருச்சி என்ற விவரம் தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ.4 லட்சம் ரொக்கம், செக் புத்தகங்கள் ஆகியவை மீட்கப்பட்டன.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    குற்றவாளியை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரை, மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

    Next Story
    ×