search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்
    X
    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்

    தமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அதிக மழையை தரும் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும்.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 20 சதவீத அளவுக்கு பெய்தது. ஆனால் இந்த ஆண்டு இயல்பான அளவான 44 சதவீதம் அளவுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல வடகிழக்கு பருவமழை நேற்றே தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்தது.

    2-வது நாளாக இன்றும் பருவமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. சென்னையில் பல இடங்களில் இதனால் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.

    வட தமிழகத்தை விட தென் மாவட்டங்களில் இன்று அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

    இந்த நிலையில் இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழக தென் கடலோர எல்லையையொட்டி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழக கடலோரத்தையொட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் இருந்து மேற்கு மத்திய பகுதி வரை கடல் மட்டத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டர் முதல் 2.1 கிலோ மீட்டர் வரை பரவி காணப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே மாலத்தீவு அருகே புதிய புயல் ஒன்று உருவாகி இருக்கிறது. அது 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் மேல் வளிமண்டலமாக பரவி உள்ளது. அது தென்மேற்கு திசை நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    மழை (கோப்புப்படம்)

    இதற்கிடையே இன்று காலை பலத்த மழை எச்சரிக்கைக்கான அறிக்கையையும் அகில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், “இன்று (வியாழக்கிழமை) முதல் 21-ந்தேதி வரை தமிழ்நாடு -புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மட்டும் மிதமான மழை பெய்யும்.

    19, 20, 21-ந்தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும். சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகம் தவிர கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று சென்னை புறநகர் பகுதிகளில் குறிப்பாக பூந்தமல்லியில் அதிக மழை பெய்தது. நேற்று இரவு முதல் இன்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கணிசமான அளவுக்கு மழை பெய்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் அமைந்துள்ளது.
    Next Story
    ×