search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    அவினாசியில் கல்லூரி பேராசிரியை வீட்டில் நகை-பணம் திருட்டு

    அவினாசியில் கல்லூரி விரிவுரையாளர் வீட்டில் நகை-பணம் திருடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    அவினாசி:

    அவினாசி காமராஜ் நகர் புளியங்காடு பகுதியில் வசிப்பவர் சதிஷ்குமார். இவரது மனைவி கோதை (34). இவர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று சதிஷ்குமார் குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்த சதிஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளி கொலுசு, அரணா, கிண்ணங்கள், ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள 2 கைக்கடிகாரம், அரை பவுன் மதிப்புள்ள கம்மல், மோதிரம் திருட்டு போய் இருந்தது.

    சதிஷ்குமார் பீரோ சாவியை அதன் மீது வைத்து விட்டு சென்றார். கொள்ளை கும்பல் அந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி, இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் நகை -பணம் திருட்டு நடைபெற்ற வீட்டை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்து மெயின் ரோடு வரை ஓடி வந்து நின்றது.

    கல்லூரி பேராசிரியை வீட்டில் நகை-பணம் திருடிய கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×