search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    370 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    X
    370 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    ரூ.109 கோடி மதிப்பீட்டில் 370 புதிய பஸ்கள் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    ரூ.109 கோடி மதிப்பீட்டில் 370 புதிய பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படும் பஸ்கள் சேவையின் மூலம் சுமார் ஒரு கோடியே 74 லட்சம் பயணிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழகத்தில் ரூ.109 கோடி செலவில் 370 புதிய பஸ்களை தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு வாங்கியுள்ளது.

    370 புதிய பஸ்களை தொடக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    புதிய பஸ்களில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பஸ்களும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பஸ்களும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 27 பஸ்களும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 57 பஸ்களும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 104 பஸ்களும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 41 பஸ்களும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 20 பஸ்களும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 26 பஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது இயக்கப்பட்டுள்ள 370 பஸ்களையும் சேர்த்து இதுவரை 2011-ம் ஆண்டு மே முதல் இதுவரை 13 ஆயிரத்து 253 புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக அரசு அர்ப்பணித்துள்ளது.

    நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×