search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ் 1 வினாத்தாள்
    X
    பிளஸ் 1 வினாத்தாள்

    செல்போன் செயலியில் தேர்வுக்கு முன்கூட்டியே பிளஸ்-1 வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு

    தேர்வுக்கு முன்கூட்டியே செல்போன் செயலியில் பிளஸ்-1 காலாண்டு தேர்வு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கு காலையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் பிளஸ்-1 வகுப்புக்கு நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிர் வேதியியல், புள்ளியியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே வினாத்தாள்கள் வெளியாவதாக கடந்த சில நாட்களாக புகார்கள் கூறப்பட்டு வந்தன.

    அதன்படி, நேற்று முன்தினம் பிளஸ்-1 வணிகவியல் தேர்வு வினாத்தாளும் வெளியாகி இருந்தது.

    ‘ஷேர் சாட்’ என்ற செல்போன் செயலியில் இந்த வினாத்தாள்கள் அனைத்தும் வெளியாவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த செயலியில் கல்வி மற்றும் தொழில்நுட்பம் என்ற பக்கத்தில், வினா வங்கியின்(கொஸ்டின் பேங்க்) உள்ளே சென்று பார்த்தால் இதுபோன்ற வினாத்தாள்கள் ஏராளமாக பகிரப்பட்டுள்ளன.

    அதேபோல், நேற்று பிற்பகலில் நடந்த பிளஸ்-1 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவுக்கான தேர்வு வினாத்தாள், காலையிலேயே செல்போன் செயலியில் வெளியாகி இருந்தது. செல்போன் செயலியில் வெளியாகி இருந்த வினாத்தாளும், பிற்பகலில் தேர்வு அறையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த வினாத்தாளும் ஒரே மாதிரியாகவே இருந்தன.

    இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிளஸ்-1 தேர்வு வினாத்தாள் மட்டும் இப்படி வெளியானதா? இதுபோல் பிற வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள்களும் வெளியாகி இருந்தனவா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், செல்போன் செயலியில் வினாத்தாளை வெளியிடுவது யார்? என்பதை கண்டறிந்து பள்ளிக்கல்வி துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

    ஆசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் வினாத்தாள் அச்சடித்து வழங்கப்படுவது இல்லை என்றும், குறைவாக வரும் நேரத்தில் வினாத்தாளை நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

    நகல் எடுக்கும் நேரத்தில் வினாத்தாள் வெளியாகிறதா? அல்லது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஊழியர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்டறிய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×