search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜக்கி வாசுதேவ்
    X
    ஜக்கி வாசுதேவ்

    தண்ணீர் பிரச்சினைக்கு நதிகள் இணைப்பு தீர்வல்ல - ஜக்கிவாசுதேவ்

    தேவைப்படும் இடங்களில் மிகவும் ஆராய்ந்து நதி இணைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வளமையான சூழலை நாம் விரும்பினால், நதியில் நீரின் வேகத்தை குறைத்து மண்ணுக்குள் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
    இந்தியாவின் சில பகுதிகள் வறட்சியிலும், மற்ற பகுதிகள் வெள்ளத்திலும் இருக்கும் நிலையில், நதிகள் இணைப்பு என்பது சரியான ஒரு தீர்வு போல் தோன்றும். ஆனால், இந்திய நதிகளுக்கு அது அழிவை விளைவிக்கும். கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் மீது இரண்டு அணைகள் கட்டிய ஆங்கிலேய அதிகாரி சர் ஆர்தர் காட்டன் என்பவர் 1858-ல் நதிகள் இணைப்பு பற்றிப் பேசியபோது இந்த கருத்து முதன்முதலாக முன்வைக்கப்பட்டது.

    அதிகமான நீர்வரத்து உடைய நதிகளை வாய்க்கால்கள் மூலமாக குறைந்த நீரோட்டம் கொண்ட நதிகளுடன் இணைப்பதே நோக்கம். ஆனால், நதி நீரியலின் விஞ்ஞானம் அன்றைய காலகட்டத்திலிருந்து விலகி, இப்போது வெகுவாக முன்னேறியுள்ளது. அவருடைய அனுபவம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நதிகளை அறிந்ததனால் வந்தது. ஆனால், இந்திய நதிகள் அவற்றைவிட முற்றிலும் மாறுபட்டவை.

    அதாவது, ஐரோப்பிய நதிகளின் நீர் மட்டம் ஒரு வருட காலத்தில் வெகுவாக வேறுபடாது. பொதுவாக, ஐரோப்பாவில் இருக்கும் நதிகளின் நீர்மட்டம், வருடத்தின் எந்த காலத்திலும், 20 சதவீதத்திற்கு மேல் வேறுபடுவதில்லை. ஆனால், இந்தியாவில் நதிகளின் நீர்மட்டம் 80 சதவீதத்திற்கும் அதிகமாக வேறுபடுகிறது. பருவமழை காலத்தில் நீங்கள் ஒரு நதியைப் பார்த்துவிட்டு, பிறகு கோடைக்காலத்தில் பார்த்தால், அதை உங்களால் அடையாளம் காணமுடியாது.

    நதிநீர்

    மழை பெய்யும் போது, நதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. மழைக்காலம் முடிந்து போனால், நதிகளில் நீர் இருப்பதில்லை. இந்த காரணத்தினால், ஒரு வெப்ப மண்டல நாட்டில் அதிகப்படியான நதிநீர் மற்றும் குறைவான நதிநீர் என்ற இந்த கருத்து தவறானது. தடுப்பணைகள் கட்டுவதும், மழைநீர் குட்டைகள் அமைப்பதும் குறுகிய கால உடனடி தேவைகளுக்கு நன்மை பயக்கும். நீண்டகால நோக்கில், நதியின் நீர் விரைவாக வற்றிப்போகாமல் இருப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, நிலத்தின் மீது இயற்கையான மரப்பரப்பு இருக்க வேண்டும். இதைத்தவிர வேறு எந்த வழியும் இல்லை.

    நதிகள் இணைப்புக்கு தேவைப்படும் பொருளாதார செலவும் மிக மிக அதிகம். குறிப்பாக, ஒரு நதியிலிருந்து மற்றொரு நதிக்கு நீரை எடுத்துச்செல்வதற்கு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு நாம் வாய்க்கால்களை அமைக்கப்போகிறோம் என்றால், சராசரியாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம்நிலவும் ஒரு நாட்டில், பெரும்பகுதி நீர் ஆவியாகப்போகிறது என்பது பொருள். இது மட்டுமின்றி, நிலப்பரப்பு உலர்ந்தும், வறண்டும் தாகத்தில் இருக்கிறது. நீங்கள் எந்தவிதமாக வாய்க்கால் அமைத்தாலும், எங்காவது கசிவு இருக்கப்போகிறது என்பதுடன் தாகத்தில் இருக்கும் நிலம் நீரை உறிஞ்சிக்கொள்ளும்.

    பிரச்சினை என்னவென்றால், எங்கே நீர் இல்லையோ அங்கு விவசாயம் செய்வதற்கு மக்கள் விரும்புகின்றனர். வறண்ட நிலங்களில் நன்செய் பயிர்களை வளர்க்க முயற்சிப்பதில் நியாயம் இல்லை. நீரை ஓரிடத்திலிருந்து எடுத்துவந்து, அதன்பிறகு நெல் அல்லது கோதுமையை வளர்ப்பதற்குப் பதில், எங்கே அதிகப்படியான நீர் இருக்கிறதோ அங்கு கோதுமை மற்றும் நெல்லை விளைவித்து, பிறகு தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்வது மிகவும் சிறப்பானது.

    எல்லாவற்றுக்கும் மேல், ஆறுகளின் நீர் கடலில் சென்று கலப்பது வீண் என்ற இந்த கருத்துதான் நதிகள் இணைப்பின் அடிப்படையாக இருக்கிறது. இந்த கருத்து மறையவேண்டும். இது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், நீரானது கடலைச்சென்று சேரவில்லை என்றால், ஒட்டுமொத்த நீர் சுழற்சியையும் நீங்கள் குலைக்கிறீர்கள். உங்களுக்கு கிடைக்கும் பருவ மழையின் அளவு, எவ்வளவு ஆற்று நீர் கடலில் கலக்கிறது என்பதுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டது.

    ஆறுகள் கடலைச் சென்றடையாமல் தடுப்பது, கரையோர நிலப்பரப்பையும் கூடப் பாதிக்கும். ஆற்று நீர் கடலில் பாயவில்லையென்றால், நிலத்தடி நீருக்குள் உப்புத்தன்மை ஊடுருவுகிறது. உதாரணத்திற்கு, குஜராத்தில், ஒவ்வொரு வருடமும் சுமார் 550 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை உப்புத் தன்மைக்கு இழந்து கொண்டிருக்கிறார்கள். கரையோர உள் நிலத்தில் அறுபது கிலோமீட்டருக்கு உப்புத்தன்மை காணப்படுகிறது.

    இந்தியா 7,400 கிலோமீட்டர் கடற்கரைப் பரப்பைக் கொண்டிருக்கிறது. ஆற்று நீர் கடலுக்குள் பாயவில்லையென்றால் கடற்கரையிலிருந்து 100-லிருந்து 130 கிலோமீட்டர் தூரம் நிலப்பரப்புக்குள் கடல் நீர் கசிந்து பரவிவிடக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்திய பூகோளத்தின் மூன்றில் ஒரு பகுதியை நீங்கள் கடல் நீருக்கு இழந்துவிடுவீர்கள். இத்தகைய இடங்களில் உங்களால் எதையும் பயிர் செய்ய முடியாது.

    குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் இத்தகைய நிலை ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. அந்த இடங்களில் நீங்கள் எங்கு ஆழ்துளைக் கிணறு தோண்டினாலும், அங்கெல்லாம் உப்பு நீர் சுரக்கும் காரணத்தால், கிராமங்கள் முழுவதும் காலிசெய்யப்பட்டுள்ளன. வெறும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்புகூட, அந்த இடங்களில் நன்னீர் இருந்தது.

    வெள்ள அபாயத்தை தடுக்கும் பொருட்டு சில இடங்களில் மிகவும் ஆராய்ந்து செய்யப்படும் நதிகள் இணைப்பினால் நன்மை உண்டு. இந்தியாவில் அத்தகைய பிரச்சினை இருக்கும் நதிகள் கோசி, மகாநதி மற்றும் பிரம்மபுத்ரா. தேவைப்படும் இடங்களில் மிகவும் ஆராய்ந்து நதி இணைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பது பலனளிக்கப் போவதில்லை. வளமையான சூழலை நாம் விரும்பினால், நதியில் நீரின் வேகத்தை குறைத்து மண்ணுக்குள் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதற்கான ஒரே தீர்வு மரங்கள் நடுவது மட்டுமே.
    Next Story
    ×