search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லணை
    X
    கல்லணை

    கல்லணையில் இருந்து 44 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

    கல்லணையில் இருந்து 44 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    மேட்டூரில் இருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் வருவதையடுத்து கல்லணையில் இருந்து 44 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கடந்த மாதம் 13-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை 17-ந்தேதி வந்தடைந்தது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து விடப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து மேட்டூரில் இருந்து காவிரியில் வினாடிக்கு 65 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையில் இருந்து 44 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கூறியதாவது:-

    கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து அதிக தண்ணீர் வெளியேற்றப்படுவதால், தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 23 ஆயிரம் கனஅடியும், காவிரி ஆற்றில் 9 ஆயிரம் கன அடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரம் கனஅடியும், கல்லணை கால்வாயில் 3 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    எனவே, கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×