search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு

    பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணியாற்றியவர் கண்ணன். இவர், தன்னுடன் வேலை செய்யும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த தொழிற்சாலையில் உள்ள பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கண்ணனை பணி நீக்கம் செய்து ஆலை நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் கண்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “புகார் கொடுத்த பெண் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார். அப்படி இருக்கும்போது, அவரை பணி நீக்கம் செய்தது தவறு. எனவே, அனைத்து பண பலன்களுடன் அவருக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    பாலியல் தொல்லைக்கு ஆளான பெண், தன் புகாரை வாபஸ் பெற்றுள்ளார். அவரது திருமண வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைக்காக வாபஸ் பெற்று இருக்கலாம். அதற்காக பாலியல் தொல்லை கொடுத்தவர் தப்பிவிட முடியாது. விசாரணையில் கண்ணன் மீதான பாலியல் தொல்லை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், புகார் வாபஸ் பெற்றதற்காக, இவருக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும் என்ற உத்தரவு சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது.

    தொழிலாளர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டால், அது சமுதாயத்துக்கு தவறான செய்தியை கொண்டு சேர்த்துவிடும். எனவே மனுதாரரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அத்துடன் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கவேண்டியது அந்தந்த நிறுவனங்களின் கடமையாகும்.

    அதேபோல சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள விசாகா கமிட்டி பரிந்துரைகளையும் அனைத்து தனியார் நிறுவனங்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறல் ஆகும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் கருணை காட்ட முடியாது.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
    Next Story
    ×