search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு -மு.க.ஸ்டாலின் கண்டனம்

    வேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே விபத்து ஒன்றின் காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த விபத்துக்கு காரணமான அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக வெடித்தது.

    வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:

    அரசியல் சட்டத்தை உருவாக்கி தந்த அறிவுலக மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலையை நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயல் மிகக் கடும் கண்டனத்திற்குரியது.

    சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக அடக்கி ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும்.

    வேதாரண்யத்தில் சிதைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலை, சீரமைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அங்கு மெல்ல மெல்ல அமைதி திரும்புகிற நல்ல அறிகுறியின் வாயிலாக மதவெறி சாதிவெறி சக்திகளுக்கு எதிராகவே தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல் தருகிறது.

    சுமூகமான நல்லிணக்க வாழ்வை மேற்கொண்டு வரும் தமிழக மக்களை, வகுப்புவாத சாதியவாத வெறியர்களுக்கு இரையாகிவிடாமல் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற சமூகநீதி ஆர்வலர்கள் அனைவருக்கும் இருக்கிறது. 

    மக்களுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்த தலைவர்களின் சிலைகளை சிதைக்க முற்படுவோரின் அற்பச் சிந்தனைகளை அகற்றியெறியும் பணிகளைத் தி.மு.க. தனது தோழமை சக்திகளுடன் இணைந்து மேற்கொள்ளும்.

    நாகை மாவட்டம், வேதாரண்யம் காவல் நிலையம் எதிரிலேயே அரசியல் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலையின் தலைப் பகுதி உடைத்து நொறுக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக் கிறது. இச்செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.

    வன்முறை கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஜீப்

    சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் இருந்தால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் என்பதை இதில் தொடர்புடையவர்கள் நன்கு உணர வேண்டும். அம்பேத்கர் சிலையை உடைத்த வன்முறை கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். 

    அரசு தரப்பில் மாற்று ஏற்பாடு செய்து, உடனடியாக மற்றொரு அம்பேத்கர் சிலை அங்கே நிறுவப்பட்டு இருப்பது ஆறுதல் தருகிறது. ஆனால், இதுபோன்ற வன்முறைகள், சிலை உடைப்புகள் தொடராமல் இருக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    Next Story
    ×