
திருவண்ணாமலை தென்றல் நகர் மாரியம்மன் கோவில் 9-வது தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. நாவல் பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டைப்பிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன் தினம் ஏழுமலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ 2 லட்சம் பணத்தை திருடிச்சென்று விட்டனர்.
இன்று காலை ஏழுமலையின் வீடு திறந்து கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் திடுக்கிட்டனர். அவர்கள் ஏழுமலைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்வையிட்டார். அப்போதுதான் நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுபற்றி திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.