search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ரெயில் நிலையம்
    X
    மதுரை ரெயில் நிலையம்

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மதுரை ரெயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மதுரை ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
    மதுரை:

    சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (15-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சூழலில் காஷ்மீரில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உள்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர்.

    மதுரை ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் சென்சார் நுழைவுவாயில் வைக்கப்பட்டு அதன் வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் போலீசார் சோதனை செய்தனர். சந்தேகத்திற்கிடமாக வருபவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் பாதுகாப்பு காரணமாக பார்சல் புக்கிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு பார்சல்கள் எதுவும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பாம்பன் ரெயில் பாலத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    Next Story
    ×