search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட காட்சி.
    X
    சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட காட்சி.

    நீலகிரி மாவட்டத்தில் 150 இடங்களில் மண்சரிவு- சீரமைப்பு பணிகள் தீவிரம்

    நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் 150 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கிய கனமழை 9-ந் தேதி வரை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால், ஊட்டி, கூடலூர், குந்தா , பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகள், மழை நீரால் சூழ்ந்துள்ளன. மாவட்டத்தில் சுமார் 350 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர,150 இடங்களில் மண் சரிவும், 100 இடங்களில் சாலையில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு கூடலூர், பந்தலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இன்று காலை மழை சற்று குறைந்து இருந்தது. ஊட்டியில் இன்று காலை லேசான மழை பெய்தது.

    மழை சற்று குறைந்து உள்ளதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது. மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஓவேலி, அவலாஞ்சி பகுதியில் மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்த பணியில் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் அதிக பட்சமாக அவலாஞ்சியில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழைக்கு அங்குள்ள மின் உற்பத்தி நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் 91 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் 11 பேர் ராணுவ ஹெலிகாப்படர் மூலம் மீட்கப்பட்டனர். மற்ற 80 பேரை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் தற்போது அங்கு மழை குறைந்து உள்ளதால் பாதிக்கப்பட்ட 80 பேரும் அங்கு தங்கி கொள்வதாக தெரிவித்து விட்டனர்.

    அவலாஞ்சி பகுதிக்கு தற்போது சிறு வாகனம் செல்லும் அளவுக்கு பாதை சரி செய்யப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து வாகனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட 80 பேருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது,நீலகிரி மாவட்டத்தில் சுமார் 350 கி.மீ. தூரம் வரையிலான சாலை பாதிக்கப்பட்டுள்ளது. 150 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதனை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து வருகிறோம். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றனர்.

    கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் மழை தொடர்வதால் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குடிநீர் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனை போர்கால அடிப்படையில் தீர்க்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.

    இந்த மழைக்கு பந்தலூர் அருகே உள்ள எருமாடு புலிங்குன்னு பகுதியை சேர்ந்த வாசு என்பவரது மண் வீடு இடிந்து விழுந்தது. வாசு மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் முன் கூட்டியே தஞ்சம் புகுந்ததால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

    அதே பகுதியை சேர்ந்த பைசல், முஸ்தபா, ஏலியாஸ், ஆபிரகாம் ஆகியோரது வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. சப்பந்தோடு பகுதியில் முன்னாள் சேரங்கோடு ஊராட்சி துணை த்தலைவர் மணிலாதேவி, பரமநாதன் ஆகியோரது வீடுகள் சேதம் அடைந்தன.

    கோரஞ்சால்சப்பந்தோடு சாலையில் ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டு உள்ள பாலம் உடைந்து விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர்.

    குன்னூர்உபதலை சாலையோரத்தில் பாழடைந்த ரெயில்வே குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் நின்றிருந்த கற்பூர மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

    வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத் துக்கு வந்தனர். ஆனால் அந்த மரம் ரெயில்வே துறைக்கு சொந்தமானது என்பதால் அதனை வெட்டி அகற்ற விடாமல் ஊழியர்கள் தடுத்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் ரெயில்வே ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மின்வாள் மூலம் மரம் துண்டு, துண்டாக வெட்டி அகற்றப்பட்டது.

    சாலையில் விழுந்த மரத் தின் கிளை அருகிலுள்ள ரெயில்வே தண்டவாளத்திலும் விழுந்ததால் அதனை வெட்டி அகற்றும் வரை குன்னூர் -ஊட்டி இடையே மலைரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஊட்டி எச்.பி.எப். மற்றும் கோழிப்பண்ணை செல்லும் சாலையில் புதுமந்து பகுதியில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மின்வாள் கொண்டு மரங்களை வெட்டி அகற்றினர்.

    Next Story
    ×