search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    மணல் திருட்டு அபராதத்தை நீர்நிலை மேம்பாட்டுக்கு பயன்படுத்தினால் என்ன? - ஐகோர்ட்டு கேள்வி

    மணல் திருட்டு அபராத தொகையை நீர்நிலை மேம்பாடு, ஏரி, குளம் உள்ளிட்டவைகளை தூர்வார ஏன் செலவு செய்யக்கூடாது? என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் தினந்தோறும் மணல் கடத்தல் வழக்குகள் ஏராளமாக பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் சிக்குபவர்கள் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டை அணுகும்போது, அவர்களுக்கு நூதன நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.

    ஜாமீன், முன்ஜாமீன் வழக்குகளை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரித்தார். அப்போது, ஒரு ‘யூனிட்’ மணல் கடத்தலுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தார். இந்த தொகையை செலுத்தினால் தான், வழக்கில் சிக்கியவருக்கு ஜாமீன் அல்லது முன்ஜாமீன் கிடைக்கும்.

    இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகை எதற்காக பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும், 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, 6 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளை நீதிபதி இளந்திரையன் விசாரித்து வருகிறார். அவர் கடந்த 6 மாதங்களில் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவர அறிக்கையை அரசு குற்றவியல் வக்கீல் பிரபாவதி தாக்கல் செய்தார்.

    சென்னை, நீலகிரி மாவட்டங்களில் மணல் திருட்டு எதுவும் இல்லை. இந்த மாவட்டங்கள் நீங்கலாக 30 மாவட்டங்களில் வசூலான தொகை எவ்வளவு? என்ற விவரம் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரூ.1 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரத்து 70, குறைந்தபட்சம் தர்மபுரி மாவட்டத்தில் ரூ.4.40 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில், இந்த அபராத தொகையை, அரசு மாணவர்கள் விடுதிக்கு டி.வி., விளையாட்டு உபகரணங்கள், புத்தகம், கிரைண்டர் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்ததாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    சில மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு அமைத்ததாகவும், அரசு கட்டிடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டியதாகவும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

    இவற்றை படித்து பார்த்த நீதிபதி இளந்திரையன், ‘இது போன்ற திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்குகிறது. அப்படி இருக்கும்போது, எதற்காக அந்த திட்டங்களுக்கு இந்த தொகையை செலவு செய்ய வேண்டும்? மணல் திருட்டில் சிக்கியவர்களிடம் இருந்து இந்த அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. மணல் திருட்டினால், நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது.

    எனவே, இந்த அபராத தொகையை நீர்நிலை மேம்பாட்டிற்காக ஏன் பயன்படுத்தக்கூடாது? ஏரி, குளம் உள்ளிட்டவைகளை தூர்வார ஏன் செலவு செய்யக்கூடாது?’ என்று சரமாரியாக கேள்வி கேட்டார். பின்னர், இதுகுறித்து விரிவான உத்தரவை விரைவில் பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.


    Next Story
    ×