search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதுரகிரி மலை மேல் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.
    X
    சதுரகிரி மலை மேல் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.

    சதுரகிரியில் பக்தர்களுக்கு தடையின்றி அன்னதானம்-குடிநீர்

    ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரிக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், சுகாதார வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
    மதுரை:

    விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரியில் சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலைமேல் உள்ள இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோ‌ஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.

    குறிப்பாக ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள்.

    இந்த ஆண்டு வருகிற 31-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது. இதையொட்டி சதுரகிரி மலைக்கோவிலுக்கு நேற்று முன்தினம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    சதுரகிரி மலைப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் சதுரகிரிக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சாமி தரிசனம் செய்து உள்ளனர். ஆடி அமாவாசைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    பக்தர்கள் வருகையை யொட்டி சதுரகிரி மலைமேல் அன்னதானம், குடிநீர், சுகாதார வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை செய்துள்ளது. இது குறித்து அந்த துறையின் இணை ஆணையர் நடராஜன் கூறுகையில், சதுரகிரி மலைமேல் உள்ள இலவச அன்னதான கூடங்கள் மூடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அரசு சார்பில் அன்னதானம், குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 8 ஆயிரம் கிலோ அரிசி, 1000 கிலோ காய்கறிகள், மளிகை பொருட்கள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு உணவு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சதுரகிரி வரும் அனைத்து பக்தர்களுக்கும் சாம்பார் சாதம், அரிசிக்கஞ்சி, ஊறுகாய் வழங்கப்படுகிறது.

    கடந்த 2 நாளில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு தங்கு தடையின்றி அன்னதானம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் 2 லட்சம் லிட்டர் குடிநீர் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. மலையில் 5 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.


    Next Story
    ×