search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரவண பவன் ராஜகோபால் விவகாரம்
    X
    சரவண பவன் ராஜகோபால் விவகாரம்

    18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை

    தமிழகத்தில் புகழ்ப்பெற்ற உணவகமான சரவண பவன் ஓட்டலின் அதிபர் ராஜகோபால் மீதான கொலை வழக்கு, 18 ஆண்டுகளாக கடந்து வந்த பாதையை பார்ப்போம்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் 18 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு.

    சரவண பவன் ஓட்டலில் பணிபுரிந்து வந்த ஜீவஜோதியின் மீது அந்த ஓட்டலின் உரிமையாளரான சரவணபவன் ராஜகோபால் ஆசை வைத்ததும், இதன் தொடர்ச்சியாக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தி கொலை செய்யப்பட்டதும் அந்த நேரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த வழக்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த நிலையில், முக்கிய குற்றவாளியான ராஜகோபால் இன்று மரணம் அடைந்தார்.

    2001-ம் ஆண்டில் இருந்து இப்போது வரையில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது சினிமாவை மிஞ்சும் வகையிலான பரபரப்பான காட்சிகளும் அரங்கேறின.

    26.1.2001 நாகை மாவட்டம் தோத்தாக்குடி கிராமத்தை சேர்ந்த ஜீவஜோதி , சரவணபவன் ஓட்டலில் பணியாற்றியபோது பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வேளச்சேரியில் குடியேறி இருந்தார்.

    இருவரும் வசித்து வந்த வீட்டில் இருந்து பிரின்ஸ் சாந்தகுமார் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி திடீரென மாயமானார்.

    31.1.2001 கணவர் மாயமானது பற்றி ஜீவஜோதி வேளச்சேரி போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரின்ஸ் சாந்தகுமாரை தேடி வந்தனர். ஜீவஜோதி அளித்த புகாரில் ராஜகோபாலும் அவரது ஆட்களும் தான் கணவரை கடத்திச் சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானல் மலைப்பகுதியில் கொடூரமாக கொலை செய்து வீசப்பட்டது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் ராஜகோபால் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த 8 பேர் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ராஜகோபால் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் 2004-ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மற்ற 8 பேருக்கும் 9 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

    கடத்தல் வழக்கில் தனியாக தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்றவர்களுக்கு 2 ஆண்டும் தண்டனை அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அனைவரும் ஐகோர்ட்டில் முறையிட்டனர். அதில் தங்களது தண்டனையை மேலும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதே நேரத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனை குறைவாக உள்ளது. எனவே அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    2009-ம் ஆண்டு: இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 3 பேருக்கு மட்டும் கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் தனது தீர்ப்பில் பூந்தமல்லி கோர்ட்டு இந்த வழக்கில் தவறு இழைத்துவிட்டதாக அப்போது குற்றம் சாட்டி இருந்தனர்.

    ஐகோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து ராஜகோபால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களையும், குற்றச்சாட்டுகளையும் வலுவாக முன்வைத்தனர்.

    இதனைதொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு 29.3.2019 அன்று தீர்ப்பளித்தது. அப்போது ராஜகோபாலுக்கு ஐகோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராஜகோபால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

    சரவண பவன் ராஜகோபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் காட்சி

    தண்டனை பெற்ற மற்றவர்கள் சிறை சென்ற நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி ராஜகோபால் மட்டும் சரண் அடைவதில் இருந்து கால அவகாசம் வேண்டும் என்று முறையிட்டார். ஆனால் அதனை ஏற்காத உச்ச நீதிமன்றம், ‘‘ஒருநாள் கூட ராஜ கோபாலால் சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக அவரை சரண் அடையும்படி உத்தரவிட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி ராஜகோபால் படுத்த படுக்கையாக ஸ்டெர்ச்சரில் வந்து ஐகோர்ட்டில் சரண் அடைந்தார். அப்போது அவரது உடல் நிலை சீராக இல்லாததால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதிகள் வார்டில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார். அவரது இதய துடிப்பு குறைந்து வந்ததுடன், சுவாசிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் ராஜகோபாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

    பின்னர் கோர்ட் அனுமதி பெற்று,  ராஜகோபாலை அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலமானார்.


    Next Story
    ×