search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தமானில் உள்ள மிதக்கும் துறைமுகத்தில் அதிகாரிகளுடன் சத்குரு சந்தித்து பேசினார்.
    X
    அந்தமானில் உள்ள மிதக்கும் துறைமுகத்தில் அதிகாரிகளுடன் சத்குரு சந்தித்து பேசினார்.

    மிதக்கும் துறைமுகத்தில் கடற்படை வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்த சத்குரு

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அந்தமானில் உள்ள இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை வீரர்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் யோகா பயிற்சி அளித்தார்.
    சென்னை:

    5-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி, இந்திய கடற்படை சார்பில் அந்தமான் நிக்கோபார் தீவில் நேற்றும் இன்றும் சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன. இதில் இந்திய தரைப்படை, கடற்படை, விமானப் படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் உட்பட சுமார் 1000 பேர் பங்கேற்றனர்.

    அவர்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட ஹடயோகா ஆசிரியர்கள் மூலம் உபயோகா கற்றுக்கொடுக்கப்பட்டது. இது மூட்டுகள், தசைகள் மற்றும் ஆற்றல் மையங்களை செயல்படுத்துகின்ற எளிய மற்றும் சக்திவாய்ந்த யோக பயிற்சி ஆகும்.

    அந்தமானில் உள்ள இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் யோகா தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமையகத்தின் தலைமை தளபதி, கடற்படை உதவி தலைவர் பிமல் வர்மா பங்கேற்றனர்.

    அந்தமானில் யோகா பயிற்சி அளித்தது தொடர்பாக சத்குரு கூறியதாவது:-



    “அந்தமான் நிக்கோபார் தீவுகள் நாட்டின் மிகவும் தனிமையான மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலப்பகுதிகளில் ஒன்றாகும். நாட்டின் இறையாண்மையைக்காக்க ராணுவத்தின் முப்படைகளின் முயற்சி உண்மையிலேயே விலைமதிப்பற்றது. இந்த வீரர்களை உயர்ந்த யோகக் கருவிகளுடன் ஆயத்தம் செய்வது மிக முக்கியமானது.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈஷா யோகா மையம் சார்பில் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி, இந்தாண்டு இந்தியா, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் யோகா வகுப்புகள் நடைபெற்றன.

    இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இந்திய ராணுவ வீரர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் மூலம் ‘உபயோகா’ என்ற யோகா பயிற்சி சொல்லிக் கொடுக்கப்பட்டது.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட 15 மத்திய சிறைகளில் ஈஷா சார்பில் 2000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கும் இன்று யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது.
    Next Story
    ×