search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெற்குன்றத்தில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து பெண் பலி
    X

    நெற்குன்றத்தில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து பெண் பலி

    நெற்குன்றத்தில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். மீன் வியாபாரி. இவரது மனைவி காளியம்மாள் (வயது 65).

    இன்று அதிகாலை 4.30 மணி அளவில் விஜய குமார் தனது மனைவியுடன் வானகரம் மீன் மார்க் கெட்டில் வியாபாரத்துக்கு மீன் வாங்க செல்வதற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலை பெருமாள் கோவில் சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார்.

    அவர்கள் ஷேர் ஆட்டோவில் செல்ல காத்திருந்தனர். அவர்களுடன் மேலும் பல பயணிகள் நின்றனர்.

    அப்போது அவ்வழியே வந்த தண்ணீர் லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பஸ் நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட காளியம்மாள் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    கணவர் விஜயகுமார் மற்றும் பஸ்சுக்காக காத்து நின்ற நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ் (33) கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் வயது (32) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறையைச் சேர்ந்த விஜயபாலன் என்பவரை கைது செய்தனர்.

    அதிகாலை நேரத்தில் டிரைவர் கண் அசந்து தூங்கியதால் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×