search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டமன்றம் நாளை மறுநாள் கூடுகிறது
    X

    புதுவை சட்டமன்றம் நாளை மறுநாள் கூடுகிறது

    பாராளுமன்ற தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய புதுவை சட்டமன்றம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கூடுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலுக்காக வைத்திலிங்கம் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். துணை சபாநாயகர் சிவகொழுந்து சபாநாயகர் பொறுப்பை கவனித்து வருகிறார். பாராளுமன்ற தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய புதுவை சட்டமன்றம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கூடுகிறது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டமன்ற செயலர் வின்சென்ட்ராயர் வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டப்பேரவை ஜூன் 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டப்படுகிறது. அதே நாளில் பேரவை தலைவர் தேர்தல் நடத்தும் தேதியாக கவர்னர் நிர்ணயித்துள்ளார். நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் இன்று தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    புதிய சபாநாயகருக்கான வேட்புமனுவை இன்று அலுவலக நேரத்திலும், நாளை பிற்பகல் 12 மணி வரையிலும் சட்டசபை செயலரிடம் தாக்கல் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் நாளை மறுநாள் கூடும் சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.

    வைத்திலிங்கம்

    சபாநாயகர் பதவிக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் தற்போதைய துணை சபாநாயகர் சிவகொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் பாலன் ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.

    இவர்களில் துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    எதிர்கட்சி தரப்பில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா ஆகியவை உள்ளது. ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் புதிய சபாநாயகர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    புதுவை சட்டசபையில் ஆளும்கட்சி, எதிர்கட்சிகளின் பலம் வருமாறு:-

    காங்கிரஸ்: 15, தி.மு.க.: 3, சுயேச்சை: 1 என மொத்தம் 19 உறுப்பினர்கள் பலத்தோடு ஆளும் கட்சி உள்ளது. எதிர்கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ்: 7, அ.தி.மு.க.:4, நியமன பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்: 3, என மொத்தம் 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

    சபாநாயகர் வைத்திலிங்கம் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றாலும் இதுவரை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்கான அறிவிப்பு ஆணை வெளியான நாளில் இருந்து 14 நாட்களுக்குள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கான காலஅவகாசம் 8-ந்தேதி வரை உள்ளது. இதனால் சபாநாயகர் தேர்தலில் வைத்திலிங்கமும் வாக்களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×