search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகளை கடத்தியதாக புகார்- வங்கி ஊழியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
    X

    மாணவிகளை கடத்தியதாக புகார்- வங்கி ஊழியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது

    மாணவிகளை திருமணத்துக்காக கடத்திச் சென்ற புகாரில் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
    கம்பம்:

    கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது மாணவி தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி பள்ளி முடிந்து அவர் வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து கம்பம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.

    விசாரணையில் மதுரை திடீர்நகரைச் சேர்ந்த அவரது தோழி நூர்நிஷா (22) என்பவருடன் சென்றது தெரிய வந்தது. நூர்நிஷாவின் நண்பரான மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் காதர் அவுலியா (21) என்பவரும் மாணவியும் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பகுதியில் குடியிருந்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் கண்டித்து அவரை அனுப்பி விட்டனர். இதனால் மாணவியை திருமணம் செய்து கொள்வதற்காக நூர்நிஷா உதவியுடன் காதர் அவுலியா கடத்திச் சென்றுள்ளார்.

    மைனர் வயதுடைய பள்ளி மாணவியை கடத்திச் சென்ற கார் டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். உடந்தையாக இருந்த அவரது தோழி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    தேனி மாவட்டம் கம்பம் குரங்கு மாயன் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பாததால் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் அவரை தேடி வந்த போது கே.கே.பட்டி சாலையில் ஒரு வாலிபருடன் அவர் நின்று கொண்டு இருந்தார். அந்த வாலிபர் சுருளிப்பட்டியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் கார்த்தீஸ்வரன் (வயது 23) என்பதும், மாணவியை திருமணத்துக்காக அழைத்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மாணவியை மீட்டு போலீசார் அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். கார்த்தீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×