என் மலர்

  செய்திகள்

  மாவட்டம் முழுவதும் கடுமையாகி வரும் குடிநீர் பிரச்சினை - கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
  X

  மாவட்டம் முழுவதும் கடுமையாகி வரும் குடிநீர் பிரச்சினை - கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு காரணங்களால் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வரும் நிலையில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் குடிநீர் தேவைக்கு கிராமப்புறங்களும், நகர்ப்புறங்களும் நீண்ட நாட்களாக நிலத்தடி நீர் ஆதாரத்தையே நம்பி உள்ள நிலையில் சமீபகாலமாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், நகர்ப்புறங்களுக்கும், ஒரு சில கிராமப்புறங்களுக்கும் கைகொடுத்து வந்தது. நகர் பகுதிகளுக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணை பகுதிகள் வறண்டு விட்ட நிலையில் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் கிடைப்பது வெகுவாக பாதித்து விட்டது.

  கிராமப்பகுதிகளில் 90 சதவீதம் கிராமங்கள் நிலத்தடி நீர் ஆதாரத்தை நம்பி உள்ள நிலையில் நீர் ஆதாரத்தில் வறட்சி, பகிர்மான குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பஞ்சாயத்து செயலர்களே குடிநீர் பிரச்சினையை கையாள வேண்டிய நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக அவர்களால் குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை.

  பல கிராம மக்கள் குடிநீர் கோரி பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களை முற்றுகையிடும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையும் தாண்டி காலிகுடங்களுடன் கிராமத்து பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

  நகர் பகுதிகளை பொறுத்தமட்டில் மக்களின் குடிநீர் தேவைக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ஓரளவு கைகொடுத்து வந்த நிலையில் சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெருமழை பெய்த காரணத்தால் தாமிரபரணிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகள் சேதம் அடைந்துள்ளதால் அங்கிருந்து வரும் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகத்தின் இடைவெளி நாட்கள் அதிகரித்து விட்டது. பேரூராட்சி பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

  மொத்தத்தில் தென்மேற்கு பருவமழை விருதுநகர் மாவட்டத்தை ஏமாற்றி விட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் வறண்டு விட்டதால் நகர்ப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகளின் நிர்வாகத்தில் உள்ள நிலையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் முனைப்புடன் எடுக்கப்படாத நிலையே நீடிக்கிறது. எனவே குடிநீர் வினியோகத்தை சீராக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிறப்பு குழுக்களை கலெக்டர் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

  முன்னேற துடிக்கும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் அடிப்படை தேவையான குடிநீர் வினியோகத்திலேயே பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசிடம் சிறப்பு நிதி கேட்டு பெற்று தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுவரை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்களுக்கு அவர்களது குடிநீர் பிரச்சினையில் தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் கிராமப்பகுதிகளிலும் குடிநீருக்காக போராட்டங்கள் நடைபெறும் நிலை ஏற்பட்டுவிடும். 
  Next Story
  ×