search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் ஹெல்மெட் அதிரடி வேட்டை தொடங்கியது- ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் பிடிபட்டனர்
    X

    சென்னையில் ஹெல்மெட் அதிரடி வேட்டை தொடங்கியது- ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் பிடிபட்டனர்

    சென்னையில் இன்று அதிகாலை 5 மணிக்கே போக்குவரத்து பிரிவு போலீசார் ஹெல்மெட் வேட்டையில் ஈடுபட்டனர். காலை நேரத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்வோர் நூற்றுக்கணக்கானோர் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது பிடிபட்டனர். #Helmet
    சென்னை:

    இருசக்கர வாகனங்களில் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசின் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 129-ல் கூறப்பட்டுள்ளது.

    பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை விரும்பாததால் இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் சாலை விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் பலியாகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 38 ஆயிரத்து 491 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் பலியான 2,476 பேரில் 1,811 பேர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று இறந்தவர்கள்.

    சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

    இதையடுத்து சென்னையில் இன்று அதிகாலை 5 மணிக்கே போக்குவரத்து பிரிவு போலீசார் ஹெல்மெட் வேட்டையில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீசார் அனைவரும் அதிகாலை 5 மணிக்கே ஹெல்மெட் சோதனையில் ஈடுபட வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி சென்னையில் வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு என 4 மண்டலங்களில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே சாலை சந்திப்புகளில் நின்று சோதனையில் ஈடுபட்டனர்.

    ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களையும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களையும் மடக்கி நிறுத்தினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்கான ரசீது வழங்கப்பட்டது. போலீசார் ரொக்கமாக அபராதம் வசூலிக்க கூடாது என்பதால் மின்னணு அட்டைகள் மூலம் அபராதம் வசூலித்தனர். மின்னணு அட்டை இல்லாதவர்கள் கோர்ட்டில் நேரடியாக அபராதம் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டது.


    காலை நேரத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்வோர் நூற்றுக்கணக்கானோர் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது பிடிபட்டனர். அவசர அவசரமாக பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு சென்றவர்கள் இதனால் தாமதமாக செல்ல நேரிட்டது.

    போக்குவரத்து போலீசாரின் ஹெல்மெட் சோதனையை ஆங்காங்கே உயர் அதிகாரிகள் ரோந்து வந்து மேற்பார்வையிட்டனர். அபராதத்தை ரொக்கமாக பெறக்கூடாது என்று சமீபத்தில் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என்று உயர் அதிகாரிகள் கண்காணித்தனர்.

    இதேபோல் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் ஆங்காங்கே ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டில் 2.14 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு ஓடுகின்றன. இதில் 84 சதவீத வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகும்.

    இதற்கு முன்பு ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோதும் போக்குவரத்து போலீசார் கட்டாய ஹெல்மெட் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் முறைகேடு நடப்பதாகவும், பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து கெடுபிடி நிறுத்தப்பட்டு அதற்கு பதில் விழிப்புணர்வு பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணிந்து செல்வோர் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

    தற்போது மீண்டும் கட்டாய ஹெல்மெட் கெடு பிடி வேட்டை தொடங்கியிருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

    ஹெல்மெட் கட்டாயம் போல் சென்னையில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். போக்குவரத்து சிக்னல்களில் விதிமீறல்கள் அதிகம் நடக்கிறது. நிறுத்த எல்லைக்கோட்டை தாண்டி வாகனங்களை நீட்டிக் கொண்டு நிறுத்துகிறார்கள். சிக்னலில் பச்சை விளக்கு எரியும் முன்பே வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். அதிவேகத்தில் செல்வோர் சிக்னலை மதிப்பதே இல்லை.

    மேலும் செல்போன்களில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது அதிகரித்து விட்டது. குடிநீர் லாரிகள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் என வாகன ஓட்டிகள் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட தடை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். #Helmet
    Next Story
    ×