
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில், அவற்றுக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது. அதன்படி தேர்தல் நடவடிக்கைகள் நடந்தன. ஆனால் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவால் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. அதில் ஐகோர்ட்டின் இடைக்கால தடை விலக்கப்பட்டது. தேர்தல்களை தொடர்ந்து நடத்த அனுமதித்த சுப்ரீம் கோர்ட்டு, முடிவுகளை மட்டும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து, 3 மற்றும் 4-ம் நிலைகளில் உள்ள சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகள் 7-ந்தேதி வெளியிடப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து அவர்களுக்கான பதவி ஏற்பு விழா நேற்று (11-ந்தேதி) காலை நடந்தது. வெற்றி பெற்றவர்கள் தங்களது சங்கங்களுக்கு வந்தனர். அவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.
அந்த வகையில் சென்னையில் திருவல்லிக்கேணி, பெரிய தெருவில் உள்ள சென்னை அரசு மற்றும் அரசு சார் நிறுவன பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட லோ.புகழானந்த் மற்றும் துணைத்தலைவர், 9 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு, தேர்தல் அதிகாரி மலர்வாணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 3 மற்றும் 4-வது நிலைகளில் உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் 3-வது நிலையில் 56 தலைவர்கள், 56 துணைத்தலைவர்கள் மற்றும் 604 நிர்வாக குழு உறுப்பினர்கள், 4-வது நிலையில் 42 தலைவர்கள், 42 துணைத்தலைவர்கள் மற்றும் 449 நிர்வாக குழு உறுப்பினர்கள் என 1,249 பேர் ஒரே நாளில் பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவரும் உடனே பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். கடந்த 5 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தவர்கள் சிலர் மீண்டும் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். இவர்களுடன் புதியவர்களும் பொறுப்புக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #CooperativeSocietyElection