search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு - 2 பேர் கைது
    X

    கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு - 2 பேர் கைது

    கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து நோட்டீசு வினியோகித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கோவை:

    கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    முதற்கட்டமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. விரிவாக்கத்துக்காக நிலம் கொடுப்பவர்களுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டும், மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தினர்.

    இதுதொடர்பாக நில உரிமையாளர்களுடன் அரசு அதிகாரிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடியிருப்பு நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.1500, விவசாய நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.900-ம் வழங்கப்படும் என்றும், குடியிருப்பு நிலம் வைத்திருப்பவர்களுக்கு 3 சென்ட் மாற்று இடம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த சி.கே.ஜெயபிரகாஷ் (வயது 40), இருகூரை சேர்ந்த செந்தில் என்ற செந்தில்ராஜ் (47) ஆகிய இருவரும் விமான நிலைய விரிவாக்க பகுதியில் நோட்டீஸ் வினியோகித்தனர்.

    மக்கள் நல கூட்டமைப்பு என்ற பெயரில் வினியோகிக்கப்பட்ட அந்த நோட்டீசுகளில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை போதாது, பணத்தை தராவிட்டால் நிலத்தை தர மாட்டோம், இந்த அரசு அடக்கு முறை அரசு, ஸ்டெர்லைட், பசுமை சாலை எதிர்ப்பு போராட்டங்களை போல இங்கும் போராட்டத்தை தொடங்குவோம் என்று வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சின்னியம்பாளையம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தேவராஜ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதில் ஜெயபிரகாஷ், செந்தில் ஆகியோர் வதந்தியை பரப்பி பொது மக்களிடம் மத்திய, மாநில அரசுகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து சி.கே.ஜெயபிரகாஷ், செந்தில் ஆகியேர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)- இரு பிரிவினர் இடையே பிரச்சினையை ஏற்படுத்துதல், 505(2) -வதந்தியை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இன்று இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×