search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எய்ம்ஸ் மருத்துவமனையால் மருத்துவ தலைநகராகும் மதுரை
    X

    எய்ம்ஸ் மருத்துவமனையால் மருத்துவ தலைநகராகும் மதுரை

    மதுரையில் எய்ம்ஸ் அமைய இருப்பதால் அரசியல் தலைநகரான மதுரைக்கு மருத்துவ தலைநகரம் என்ற சிறப்பு கிடைத்துள்ளது. #AIIMS #AIIMSinMadurai
    மதுரை:

    இந்த பெயரை கேட்டாலே நோயாளிகளுக்கு சுகம் கிடைத்த மாதிரி தைரியம் வரும். அந்த அளவுக்கு நாட்டில் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் என்றழைக்கப்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வழங்கி வருகிறது.

    1956-ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ‘எய்ம்ஸ்’ அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போபால் (மத்திய பிரதேசம்), புவனேஸ்வர் (ஒடிசா), ஜோத்பூர் (ராஜஸ்தான்), பாட்னா (பீகார்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), ரிஷிகேஷ் (உத்தரகாண்ட்) ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டன.

    இதுவரை 7 இடங்களில் மக்களுக்கு தரமான உயர்தர சிகிச்சை வழங்கி வரும் எய்ம்ஸ் 8-வதாக தமிழகத்துக்கு வந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தமிழகத்துக்கு எய்ம்ஸ் அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.

    4 ஆண்டுகள் நடத்தப்பட்ட பல்வேறு வியூகங்களுக்கு மத்தியில் எய்ம்ஸ் தமிழகத்தில் மதுரை அருகே உள்ள தோப்பூரில் அமைய உள்ளது.

    தமிழ்நாட்டில் தஞ்சை, செங்கிப்பட்டி உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டன. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனைத்து சாராம்சங்களும் மதுரை தோப்பூரில் மட்டுமே இருந்தது.

    மதுரை தோப்பூரில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ. 1,500 கோடி செலவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்கான 262 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பது மற்றும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் விரைவில் செய்யப்பட உள்ளன.

    மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையால் மதுரை, திருமங்கலம், தேனி, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள்.

    மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கான ஆராய்ச்சிகள், 100 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சீட், 65 நர்சிங் சீட், ஆகியவையும் ஏற்படுத்தப்படுகிறது.

    750 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ சிகிச்சையில் முக்கிய பிரமுகர்கள் முதல் ஏழைகள் வரை அனைவருக்கும் தரமான சிகிச்சைகள் தரப்பட உள்ளது.

    ரூ.10 ஆயிரம் செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் சிகிச்சை பெறும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

    மதுரை நகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை விமான நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மதுரையில் எய்ம்ஸ் அமைய இருப்பதால் அரசியல் தலைநகரான மதுரைக்கு மருத்துவ தலைநகரம் என்ற சிறப்பு கிடைத்துள்ளது.

    சர்வதேச நகரங்களில் மதுரையும் இடம்பெறும். வேலைவாய்ப்பு மற்றும் ரியல் எஸ்டேட், நவீன போக்குவரத்து வசதிகள், கூடுதல் விமான சேவை என பல்வேறு முக்கிய திட்டங்களும் மதுரைக்கு கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் மதுரை நாட்டின் முக்கிய நகரப்பகுதிகளில் ஒன்றானதாகும்.

    மதுரையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிவித்தனர்.

    தற்போது எய்ம்ஸ் மதுரைக்கு கிடைத்து இருப்பது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், மதுரைக்கு எய்ம்ஸ் அறிவிப்பு தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் 17 மாவட்ட மக்களின் இதயக்கனியாக மாறி விட்டது என்றும் கூறினார்.

    எய்ம்ஸ் அமையும் இடத்தை ஆய்வு செய்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில் தமிழகத்துக்கு கிடைத்த இந்த மாபெரும் திட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

    பல்வேறு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எய்ம்ஸ் அறிவிப்பை மனதார வாழ்த்தி வரவேற்கிறார்கள்.

    எய்ம்ஸ் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு மக்களின் நோய் தீர்க்கும் அரும் மருந்தாக விரைவில் கிடைக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும். #AIIMS #AIIMSinMadurai
    Next Story
    ×