search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ் படங்களுக்கு மானியம் - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
    X

    குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ் படங்களுக்கு மானியம் - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

    குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #EdappadiPalanisamy #Tamilfilms
    சென்னை:

    குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், 2007 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களில் மானியம் பெறுவதற்கு தகுதியான தமிழ்த் திரைப்படங்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்.ரகுபதி, டி.வி. மாசிலாமணி தலைமையிலான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

    இத்தேர்வுக் குழுவினர், 2007-ம் ஆண்டுக்கு 14 திரைப்படங்களுக்கும், 2008-ம் ஆண்டுக்கு 18 திரைப்படங்களுக்கும், 2009-ம் ஆண்டுக்கு 22 திரைப்படங்களுக்கும், 2010-ம் ஆண்டுக்கு 21 திரைப்படங்களுக்கும், 2011-ம் ஆண்டுக்கு 17 திரைப்படங்களுக்கும், 2012-ம் ஆண்டுக்கு 22 திரைப்படங்களுக்கும், 2013-ம் ஆண்டுக்கு 12 திரைப்படங்களுக்கும் மற்றும் 2014-ம் ஆண்டுக்கு 23 திரைப்படங்களுக்கும் என மொத்தம் 8 ஆண்டுகளுக்கு 149 திரைப்படங்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.

    தேர்வு செய்யப்பட்ட 149 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 10 கோடியே 43 லட்சம் ரூபாய் மானியத்தொகைக்கான காசோலைகளை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், 10 தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியமாக தலா 7 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy #Tamilfilms
    Next Story
    ×