search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, நீலகிரியில் கனமழை - சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் விழுந்ததில் 6 பேர் உயிர்தப்பினர்
    X

    கோவை, நீலகிரியில் கனமழை - சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் விழுந்ததில் 6 பேர் உயிர்தப்பினர்

    கோவை மாவட்டத்தில் நேற்று இரவு சூறாவளி காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் சென்ற கார் மீது மரம் சாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக 6 உயிர் தப்பினர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது.

    நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி-மின்னலுடன் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கியது.

    காந்திபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், துடியலூர் மற்றும் மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம், சூலூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் தெற்குஉக்கடம் பெருமாள் கோவில் வீதி, சரவணம்பட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மரங்களை அகற்றினர். மின்இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் மின்ஊழியர்கள் விரைந்து சென்று இணைப்பை சரி செய்தனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக குளங்கள், குட்டைகளை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையத்திலும் இரவு 10 மணியளவில் திடீரென சூறாவளி காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக நகர் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.

    இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வரதராஜ் (வயது 65). லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். கார் மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோட்டில் கல்லாறு தூரிப்பாலம் அருகே இரவு 10.30 மணியளவில் வந்த போது ரோட்டோரத்தில் இருந்த மாமரம் கார் மீது விழுந்தது.

    இதில் காரில் பயணம் செய்த 6 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். இதன் காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் பெரிய நாயக்கன் பாளையம் டி.எஸ்.பி. மணி, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்ன கேசவன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் தீயணைப்பு அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3½ மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

    கல்லாறுபுதூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). கூலித் தொழிலாளி. இவர் வீட்டு முன்பு 100 ஆண்டுகள் பழமையான தாணி மரம் உள்ளது. இந்த மரத்தால் தனது வீட்டுக்கு ஆபத்து வரும் என்பதால் இதனை வெட்டி அகற்ற கோரி செல்வம், கலெக்டர், தாசில்தார், முதல்-அமைச்சர் ஆகியோருக்கு மனு அளித்து இருந்தார். இந்தநிலையில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் தாணி மரத்தின் கிளை உடைந்து செல்வம் வீட்டின் சமையல் அறையில் விழுந்தது. மரம் சமையல் அறை மீது விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உயிர் தப்பினர்.

    இதேபோல் கல்லார் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 80 அடி உயர வாக்கிடாக்கி டவரும் சாய்ந்து விழுந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டர் அளவில் வருமாறு:-

    பீளமேடு-37.40, மேட்டுப்பாளையம்-17, பொள்ளாச்சி -2, பெரியநாயக்கன்பாளை யம்-23, சூலூர்-7.20, வேளாண் பல்கலைகழக பகுதி-12.60, வால்பாறை பரம்பிகுளம் ஆழியாறு திட்ட பகுதி-1, வால்பாறை தாலுகா அலுவலக பகுதி-2.

    நீலகிரி மாவட்டத்திலும் இரவு இடி- மின்னலுடன் தொடங்கிய கனமழை சூறாவளி காற்றுடன் பெய்தது. 10 மணியில் இருந்து அதிகாலை 3 வரை பேய் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் பைக்காரா, அவலாஞ்சி, ஏமரால்டு, காமராஜர் சாகர் ஆகிய அணைகள் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தொட்டபெட்டா, டைகர்ஹில், கோரிசோலா, மாதுலமந்து ஆகிய ஏரிகளில் நீர் மட்டம் கணிமாக உயர்ந்துள்ளது.

    விவசாய தோட்டங்களில் அதிகளவில் தண்ணீர் புகுந்துள்ளதால் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இடி- மின்னல் மற்றும் சூறாவளியுடன் பெய்த மழையால் செல்போன் டவர் பழுதடைந்தது. இதனால் செல்போன் சேவைகள் பாதிப்படைந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். விடியவிடிய மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

    இதேபோன்று குன்னூர், கோத்தகிரியிலும் நேற்று இரவு சூறாவளியுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குன்னூர்- கோத்தகிரி 3 ரோடு, பெட்போர்டு, சிம்ஸ்பார்க், ராணுவமுகாம், பாலக்கொலா ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் ராணுவ முகாமில் மட்டும் 7 மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    பல இடங்களில் மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. மரங்கள் சாய்ந்து விழுந்த இடங்களுக்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    குன்னூரில் 26.8 மி.மீட்டரும், கேத்தியில் 9 மி.மீட்டரும், பர்லியாரில் 16-ம், கோத்தகிரியில் 26-ம், கொடநாட்டில் 22 மி.மீட்டரும் மழை பதிவானது.
    Next Story
    ×