search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை
    X

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு தடவை உபயோகப்படுத்தி விட்டு வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்தவும் தடை விதித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டு இருந்தார்.

    பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை தவிர்க்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் எந்தந்த பொருட்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில், பசுமை கண்காட்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் முற்றிலுமாக தடை விதித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தட்டுகள், தெர்மாகோல் தட்டுகள் மற்றும் கப்கள், பேனர்கள், பைகள், பேக்கிங் பைகள், தொப்பிகள், படுக்கை விரிப்புகள், கையுறைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், முலாம் பூசப்பட்ட வெள்ளி கவர்கள், ஒரு லிட்டருக்கு கீழ் உள்ள தண்ணீர் பாட்டில்கள், பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் பெட்டிகள், நோட்டு, புத்தகங்களுக்கு பிளாஸ்டிக் உடன் கூடிய பழுப்பு நிற பேப்பர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.

    இந்த தடை உத்தரவு நேற்று (தை 1 முதல்) அமலுக்கு வருகிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதோடு, சுற்றுச்சூழலை பாதுகாத்திட வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #tamilnews
    Next Story
    ×