search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்: ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி
    X

    மின்சார ரெயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்: ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி

    ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் இன்று வேறு வழியில்லாமல் மின்சார ரெயில்களில் சென்றார்கள்.
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில்களும், மாநகர பஸ்களும் முக்கிய அங்கமாக செயல்பட்டு வருகின்றன. பஸ்கள் ஓடாததால் இன்று மின்சார ரெயில்கள் கை கொடுத்தது.

    சென்னையில் 3,200 மாநகர பஸ்களில் தினமும் சுமார் 45 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பஸ் போக்குவரத்து முடங்கியதால் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் இன்று மிகவும் சிரமப்பட்டனர். அரசு பஸ்களில் வழக்கமாக செல்லக்கூடியவர்கள் இன்று வேறு வழியில்லாமல் மின்சார ரெயில்களில் சென்றார்கள்.

    ‘பீக் அவர்ஸ்’’ எனப்படும் காலை 9 மணி முதல் 10 மணி வரை மின்சார ரெயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். பஸ்கள் ஓடாததால் பஸ் பயணிகளும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ரெயில் நிலையங்களில் குவிந்தனர்.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் திருவிழா போல கூட்டம் காணப்பட்டது. ரெயில்களில் முண்டியடித்து கொண்டு ஏறி பயணம் செய்தனர்.

    அரசு, தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களில் பணியாற்றக் கூடியவர்கள், தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்கள் வேலை செய்யக் கூடியவர்கள் காலையில் மிகவும் அவதிக்குள்ளாகி பணிக்கு சென்றனர். ரெயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். சென்ட்ரல், மூர்மார்க்கெட், எழும்பூர், தாம்பரம், கடற்கரை, செங்கல்பட்டு, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கொருக்குப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, மார்க்கத்திலும் பயணிகள் கூட்டம் மிகுதியாக இருந்தது.

    பஸ்கள் ஓடாததால் ஆட்டோ டிரைவர்கள் தாறுமாறாக கட்டணம் வசூலித்தனர். வழக்கமாக பெறக்கூடிய கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமாக கேட்டனர். ஷேர் ஆட்டோக்களில் குறைந்த தூரத்தில் ரூ.5, ரூ.10 என வசூலிக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று ரூ.20 வசூலித்தனர். சாலைகளில் ஆட்டோக்களின் நடமாட்டம் பெருமளவில் காணப்பட்டன. அவசர பயணம், மருத்துவமனைக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்துடன் சென்றனர். தேவையையும், கூட்டத்தையும் பார்த்து ஆட்டோ டிரைவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலித்தனர்.
    Next Story
    ×