search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டி பகுதியில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்
    X

    தேவதானப்பட்டி பகுதியில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்

    தேவதானப்பட்டியில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பருவநிலை மாறி வருகிறது. இதனால் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

    மருத்துவத்துறை அதிகாரிகளும் கிராமங்களில் முகாமிட்டு நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் நாகபாண்டி. இவரது மகள் ராகஸ்ரீ(வயது7). அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ரத்த பரிசோதனையில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தேனி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

    தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி ஜீவிதா. இவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

    எனவே இப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றி டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தொடர்ந்து டெங்கு பாதிப்பால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    Next Story
    ×