search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் ஸ்டீவின் மேத்யூவுடன் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் மற்றும் போலீசார்.
    X
    சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் ஸ்டீவின் மேத்யூவுடன் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் மற்றும் போலீசார்.

    மனவளர்ச்சி குன்றிய வாலிபரின் கனவை நிறைவேற்றிய கமிஷனர்

    மனவளர்ச்சி குன்றிய வாலிபரின் சப்-இன்ஸ்பெக்டர் கனவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிறைவேற்றினார்.
    சென்னை:

    சென்னை ஜாபர்கான்பேட்டை, ராமச்சந்திர தெருவை சேர்ந்த ராஜூவ் தாமஸ் என்பவருடைய மகன் ஸ்டீவின் மேத்யூ (வயது 19), மனவளர்ச்சி குன்றியவர். இவர்கள் தொழில் நிமித்தமாக கத்தார் நாட்டில் குடியிருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு கத்தார் சென்றிருந்தபோது, அங்கு இந்திய தூதரகம் நடத்திய மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் கலைநிகழ்ச்சியை பார்வையிட்டார். இதில் ஸ்டீவின் மேத்யூவும் பங்கேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களை சந்தித்து அவர்களுடைய லட்சியம், விருப்பம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அப்போது ஸ்டீவின் மேத்யூ பிரதமரிடம், ‘நான் ஒரு நாள் போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும்’ என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.

    கத்தார் நாட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஸ்டீவின் மேத்யூவும், அவருடைய குடும்பத்தினரும் சென்னை திரும்பினர். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து ஸ்டீவின் மேத்யூவின் போலீஸ் அதிகாரி ஆசையை அவருடைய பெற்றோர் எடுத்துக்கூறினர். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் இறங்கினார்.

    அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் அமர்வதற்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அனுமதி வழங்கினார்.

    அதன்பேரில் ஸ்டீவின் மேத்யூவுக்கு போலீசார் சார்பில் 2 நட்சத்திரங்களுடன் சப்-இன்ஸ்பெக்டருக்கான சீருடை வழங்கப்பட்டது. அந்த உடையை அணிந்து மாலை 5.45 மணியளவில் அசோக் நகர் போலீஸ் நிலையத்துக்கு ஸ்டீவின் மேத்யூ வந்து இறங்கினார். அவரை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பதிலுக்கு அவருக்கு ஸ்டீவின் மேத்யூ சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் போலீஸ் நிலையத்துக்குள் சென்ற ஸ்டீவின் மேத்யூவிடம் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்தார். ஸ்டீவின் மேத்யூ சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்தார். பின்னர் போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டார்.

    அதன்பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டார். அவருக்கு நினைவு பரிசு வழங்கி போலீசார் வழியனுப்பி வைத்தனர். அவருடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அப்போது ஸ்டீவின் மேத்யூவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.
    Next Story
    ×