search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாட்டில் 400 கிலோ நகையுடன் 2 பெட்டகங்கள் மீட்பு
    X

    சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாட்டில் 400 கிலோ நகையுடன் 2 பெட்டகங்கள் மீட்பு

    தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், இடிபாட்டில் இருந்து 400 கிலோ நகையுடன் 2 பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததால், கட்டடத்தை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. 

    அதன்படி, அந்த கட்டடத்தை தனியார் நிறுவனம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக ஜா கட்டர் என்ற ராட்சத இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. கட்டிடத்தை இடிக்கும் பணி 20 நாட்களுக்கும் மேலாக நீடித்தது.

    இந்நிலையில், தீ விபத்துக்குள்ளான தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடம் நேற்று முன் தினம் முற்றிலும் இடிக்கப்பட்டது. இடிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த ஒப்பந்ததாரர் பீர் முகமது இந்த தகவலை உறுதி செய்தார். 

    கட்டடம் முழுவதுமாக இடிக்கப்பட்டதை தொடர்ந்து, இடிபாடுகளை அகற்றம் செய்யும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகங்கள்  சிக்கி இருந்தன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இடிபாடுகளை அகற்றும் பணிகளின் போது 2 பாதுகாப்பு பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 400 கிலோ தங்க நகைகளும், 2 ஆயிரம் கிலோ வெள்ளியும் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு 20 கோடி இருக்கும் என்று தெரிகிறது.
    Next Story
    ×