search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கடந்த 4 வருடங்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை சரிவர பெய்யவில்லை. இந்த வருடம் வறட்சி கடுமையாக இருந்தது. இதனிடையே அவ்வப்போது கோடை மழை பெய்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டே இருந்தது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

    திண்டுக்கல் நகரில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழையாக தொடங்கி பலத்த மழை பெய்தது. கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் இந்த மழையால் பூமி குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல் அருகே வடமதுரை, தாமரைப்பாடி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மின் வயர் அறுந்து திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 3 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    மின் ஊழியர்கள் வயரை சரி செய்து வருகின்றனர். போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். கன்னிவாடி பகுதியிலும் நல்ல மழை பெய்தது. தோழிமலை பகுதியில் பெய்த மழையினால் அணை அருகே உள்ள உள்ள வெட்டுப்பள்ளத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதே போன்று 2 மழை பெய்தால் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல் பகுதியில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. மலர் கண்காட்சி நடந்து வரும் வேளையில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    சாரல் மழையில் நனைந்தவாறே சுற்றுலா தளங்களை கண்டு ரசித்தனர். இது தவிர வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    Next Story
    ×