search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைவினைக் கலைஞர்களுக்கான பிரத்யேக வலைத்தளம்: முதலமைச்சர் துவக்கி வைத்தார்
    X

    கைவினைக் கலைஞர்களுக்கான பிரத்யேக வலைத்தளம்: முதலமைச்சர் துவக்கி வைத்தார்

    கைவினைஞர்களைப் பற்றியும் அவர்களது திறமைகள் தொடர்பான அனைத்து தகவல்கள் அடங்கிய வலைத்தளத்தை பொதுமக்கள் பயனடையும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழகத்திலுள்ள அனைத்து கைவினைஞர்களைப் பற்றியும் அவர்களது திறமைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்து அவர்களுக்கென தனி வலைத்தளம் உருவாக்கிட தமிழக அரசு, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் 2015-2016ஆம் ஆண்டில் 1 கோடி ரூபாய் நிதியினை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்திற்கு வழங்கியது.

    இந்த வலைத்தளத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கைத்திறக் கைவினைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கைவினைஞர் மற்றும் அவர்களது திறமைகள் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும்.  இதன்மூலம் கைவினைஞர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் சமூக வலைதளங்கள் மூலம் உலகமெங்கும் சென்றடைய வழிவகை செய்யப்படும்.



    தமிழகத்திலுள்ள சுமார் இரண்டு லட்சம் கைத்திறக் கைவினைஞர்களை இத்தொகுப்பில் இணைக்க திட்டமிடப்பட்டு,  இதுவரையில் 10,000 கைவினைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு 500 கைவினைஞர்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கைவினைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    கைவினைஞர்களைப் பற்றியும் அவர்களது திறமைகள் தொடர்பான அனைத்து தகவல்கள் அடங்கிய www.tnartisaan.com என்ற வலைத்தளத்தை பொதுமக்கள் பயனடையும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (12.5.2017) தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.

    மேலும், 2016-17ஆம் ஆண்டிற்கான வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 65 வயதிற்கு மேற்பட்ட 9 திறன்மிகு கைவினைஞர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், 1 தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றையும் மற்றும் 2016-17ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறந்த கைவினைஞர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், 1 தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றையும் முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்.



    இந்த நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பி. பெஞ்சமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ் பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×