search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிபதி கர்ணன் ஆந்திராவில் பதுங்கல்  - 3 மாநில போலீசார் தேடுதல் வேட்டை
    X

    நீதிபதி கர்ணன் ஆந்திராவில் பதுங்கல் - 3 மாநில போலீசார் தேடுதல் வேட்டை

    சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த நீதிபதி கர்ணன் நேற்று திடீரென்று தலைமறைவானார். அவர் ஆந்திராவில் பதுங்கியிருக்கலாம் என்று 3 மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணன், சென்னை ஐகோர்ட்டில் பணிபுரிந்து வந்த போது, கடந்த 2015-ம் ஆண்டு, தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.

    தான் ஒரு தலித் நீதிபதி என்பதால், எஸ்.கே.கவுலும் சக நீதிபதிகளும் என்னை ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்கள் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.

    இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கர்ணன், கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகும் கர்ணன், நீதிபதிகள் மீது குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தார்.

    20-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய கர்ணன், இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு புகார் மனுக்களையும் அனுப்பினார். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டு, நீதிபதி கர்ணன் மீது தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை ஏற்று சுப்ரீம் கோர்ட்டில் கர்ணன் ஆஜரானார். அப்போது நீதிபதிகள் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.



    ஆனால் இதற்கு கர்ணன் பதில் அளிக்காததால் அவருக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இதற்கு அவர் ஒத்துழைக்கவில்லை. கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்த மருத்துவ குழுவை அவர் திருப்பி அனுப்பினார்.

    அதே நேரத்தில் தனக்கு மனநல பரிசோதனை செய்ய உத்தரவிட்ட 7 நீதிபதிகளுக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி கர்ணனை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனால் கர்ணனுக்கும், சக நீதிபதிகளுக்கும் இடையேயான மோதல் வெடித்தது.

    இதற்கிடையே நீதிபதி கர்ணன், கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்த அவரை கைது செய்வதற்காக மேற்கு வங்காள போலீசார் சென்னை வந்தனர்.

    அம்மாநில டி.ஜி.பி. தலைமையில் கூடுதல் டி.ஜி.பி., துணை கமி‌ஷனர், உதவி ஆணையர், இன்ஸ் பெக்டர் ஆகியோர் நேற்று காலை சென்னையை வந்தடைந்தனர்.

    ஆனால் நீதிபதி கர்ணன் அதற்கு முன்னதாகவே சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேறினார். அவர் காளஹஸ்திக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருப்பதாகவும், மாலையில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து டி.ஜி.பி. சுரவித்கார் புர்க யஷா, கூடுதல் டி.ஜி.பி. ரன்பீர் குமார், துணை கமி‌ஷனர் சுதாகர், உதவி ஆணையாளர் ஏ.கே.தாஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்கா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது கர்ணனை பிடிப்பதற்காக காளஹஸ்திக்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி கொல்கத்தா துணை கமி‌ஷனர் சுதாகர், உதவி கமி‌ஷனர் ஏ.கே.தாஸ் ஆகியோர் தமிழக போலீஸ் படையுடன் நேற்று பிற்பகலில் ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றனர். கொல்கத்தா போலீசார் நடத்தி வரும் அதிரடி வேட்டைக்கு உறுதுணையாக இருப்பதற்காக தமிழக போலீசிலும் தனிப்படை அமைக்கப்பட்டது.

    திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த தனிப்படையினரும் கொல்கத்தா போலீசாருடன் ஆந்திராவுக்கு சென்றனர்.

    காளஹஸ்தி செல்லும் வழியில் தடா அருகே சூலூர் பேட்டையில் நேற்று இரவு போலீசார் முகாமிட்டனர். கொல்கத்தா மற்றும் தமிழக போலீசுடன் ஆந்திர மாநில போலீசாரும் இணைந்து, நீதிபதி கர்ணனை தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டினர்.

    செல்போனை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதற்கான முயற்சிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டன. அப்போது நீதிபதி கர்ணன் ஆந்திர மாநிலத்துக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு சென்ற பின்னர் நேற்று மாலையில் இருந்து அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.



    இதனால் கர்ணனை கைது செய்யும் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆந்திரா சென்ற அவர் காளஹஸ்திக்கு செல்லாமல் அங்கு வேறு இடத்தில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கர்ணன் இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் வேறு வழியின்றி மேற்கு வங்க போலீஸ் அதிகாரிகள் நேற்று இரவே சென்னை திரும்பினர். எழும்பூரில் உள்ள ‘‘ஆபீசர்ஸ் மெஸ்’’ விடுதியில் அவர்கள் தங்கி உள்ளனர்.

    போலீஸ் பிடியில் இருந்து நீதிபதி கர்ணன் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய சொல்லி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதால் கர்ணனை எப்படியும் பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு கொல்கத்தா போலீசார் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காக தமிழக, ஆந்திர மாநில போலீசாரின் உதவியை அவர்கள் முழுமையாக நம்பியுள்ளனர்.

    இன்று 2-வது நாளாக கர்ணனை கைது செய்வதற்காக 3 மாநில போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கர்ணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் கொல்கத்தா போலீசார் திணறி வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் காலையில் சேப்பாக்கம் விருந்தினர் இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன், அன்று மதியம் வரையில் அங்கேயே இருந்துள்ளார். அதன் பின்னரே அவர் வெளியில் சென்றார்.

    தான் பயன்படுத்தி வந்த அரசு காரை பயன்படுத்தாமல் பாதுகாப்பு அதிகாரியையும் உதறிவிட்டு சென்ற கர்ணன் தலைமறைவாக இருப்பதற்கு முன்கூட்டியே திட்டமிட்டுள்ளார்.

    இதன்படி காளஹஸ்திக்கு செல்வதாக கூறிய அவர் அங்கு செல்லாமல் ரகசிய இடத்தில் தங்கி இருக்கிறார். ஆந்திராவில் தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் யாருடைய வீட்டிலாவது கர்ணன் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இருப்பினும் அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் கர்ணன், யார்- யாரிடமெல்லாம் நேற்று செல்போனில் பேசி இருக்கிறார் என்பது பற்றிய பட்டியலை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். இவர்கள் மூலமாக கர்ணனை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×