search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் - ஆகஸ்ட் மாதம் வெளியீடு
    X

    ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் - ஆகஸ்ட் மாதம் வெளியீடு

    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. #ARRahmanbiography
    புதுடெல்லி:

    ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

    ‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார். 

    இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலகின் முக்கிய பெரு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 

    இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

    பென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு ’நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    விளம்பரப் படத்துக்கு இசையமைத்தது முதல் ஆஸ்கர் விருது என்னும் மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றதுவரை தனது இசையுலகப் பயணத்தில் ரஹ்மான் கடந்துவந்த பாதை மற்றும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இந்த புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

    பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் டேன்னி பாய்லே எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட பென்குயின் பதிப்பகம் தீர்மானித்துள்ளது.

    ’இத்தனை ஆண்டுகளாக இசையின் மூலம் என்னை அறிந்திருக்கிறீர்கள். நான் யார்? எங்கே சென்று கொண்டிருக்கிறேன்? என்பதை நீங்கள் வாசிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்’ என தனது முன்னுரையில் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.  #ARRahmanbiography #Penguinpublishers
    Next Story
    ×