search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    விஜயகாந்த் பிரசாரத்துக்கு தயாராகிறார்- திறந்த வேனில் செல்ல ஏற்பாடு

    விருகம்பாக்கம், விருத்தாச்சலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தே.மு.தி.க., தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

    இந்த கூட்டணியில் 60 தொகுதிகளில் தே.மு.தி.க. களம் இறங்கி உள்ளது. விஜயகாந்த் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதியில் அவரது மனைவி பிரேமலதா போட்டியிடுகிறார். விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

    உடல்நிலையை கருத்தில் கொண்டு விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடாமல் உள்ளார். அதே நேரத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக நேற்று பேட்டி அளித்த பிரேமலதா கடைசி நேரத்தில் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று கூறி உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் திறந்த வேனில் நின்றபடி விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். அதேபோன்று குறிப்பிட்ட சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

    விருகம்பாக்கம், விருத்தாச்சலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொகுதிகளில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

    விஜயகாந்தின் உடல்நிலை ஒத்துழைத்தால் டி.டி.வி. தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியிலும் பிரசாரம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    தே.மு.தி.க. தொண்டர்கள், விஜயகாந்தின் பிரசாரத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். எனவே அவர்களது எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் நிச்சயம் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தே.மு.தி.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த், வருகிற 19-ந் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய தினம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விருத்தாச்சலம் சென்று வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

    இதன் பின்னர் பிரேமலதா தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
    Next Story
    ×