search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குஷ்பு, கருணாநிதி
    X
    குஷ்பு, கருணாநிதி

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்- கண்ணீரிலும் கலைஞரின் நகைச்சுவை- 37

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். அதே போல் தலைநகரம் சென்னை என்று சொல்லப்பட்டாலும் கோபாலபுரம்தான் முக்கியத்துவம் பெறும் பகுதி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் வியூகங்கள் அனைத்தும் இங்கிருந்துதான் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

    கலைஞர் என்ற மிகப்பெரிய தலைவர் இருந்ததால் கோபாலபுரம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் அரசியலிலோ, அதிகாரத்திலோ எந்த தொடர்பும் இல்லாத சாதாரண இந்த குஷ்புவுக்கும் அங்கு ஒரு இடம் இருந்தது என்பதை நினைக்கும்போது மிகப்பெரிய வரலாறு படைக்கப்பட்ட இடத்தில், படைக்கப்பட்ட நேரத்தில் நானும் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமை.

    காலையில் எழுந்து கோபாலபுரம் செல்ல வேண்டும் என்றாலே மனதுக்குள் மகிழ்ச்சி உண்டாகும். கலைஞரை சந்திக்க வேண்டும் என்று அனுமதி கேட்டால் அவரது நிகழ்ச்சி நிரலை பொறுத்து அவரிடம் கேட்டு மறுநாள் எப்போது வரவேண்டும் என்று தெரிவிப்பார்கள். இதுதான் நடைமுறை.

    ஒரு நெருக்கடியான நேரம் எப்படியாவது கலைஞரை சந்தித்து முறையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்ற  நம்பிக்கை. அப்போது நான் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருந்தேன். சங்கத்துக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எங்களால் படப்பிடிப்பையும் நடத்த முடியாத சூழ்நிலை. எங்களை எதிர்த்தவர்களை எங்களால் சமாளிக்க முடியவில்லை. எனவேதான் அந்த பிரச்சினையை கலைஞரிடம் கொண்டு செல்வது என்று முடிவு செய்தோம்.

    அப்போது அவர் முதல்-அமைச்சராக இருந்தார். ஒருநாள் இரவு 11 மணி. கோபாலபுரம் இல்லத்துக்கு போன் செய்து வழக்கம் போல் தலைவரை சந்திக்க வேண்டும். நேரம் வாங்கி தாருங்கள் என்று கேட்டேன்.
    எப்படியும் காலையில் தான் கூப்பிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் சந்திக்க நேரம் கேட்டதுபற்றி அவரது கவனத்துக்கு உடனே கொண்டு சென்று இருக்கிறார்கள்.

    சரி, காலையில் பேசிக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கவில்லை. ஏதோ ஒரு முக்கியமான பிரச்சினைக்காகத்தான் இரவு நேரத்தில் பேசி இருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டு என்ன பிரச்சினை என்பதை அவரே அதிகாரிகள் மூலம் அறிந்து இருக்கிறார்.

    அடுத்த 5 நிமிடத்தில் கோபாலபுரத்தில் இருந்து அழைப்பு வந்தது. நீங்கள் காலை வரை காத்திருக்க வேண்டாம். உடனே புறப்பட்டு வாருங்கள். தலைவர் வரச் சொல்கிறார் என்றார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கு சென்றதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்கள் எதிர் தரப்பையும் அங்கு வரவழைத்து இருந்தார்கள்.

    கருணாநிதி, குஷ்பு


    அவ்வளவு பிசியான நேரத்திலும் கண் விழித்து கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பிரச்சினை என்றதும் அவரே தலையிட்டு பேசினார். அவர் அருகில் இரு தரப்பும் அமர்ந்திருந்தோம். யாரையும் கண்டிக்கவோ, கடுமையான குரலில் பேசவோ இல்லை. மாறாக ஆலோசனைதான் சொன்னார். இது கலைத்துறை. கலைத்துறையில் ஒருவருக் கொருவர் ஆரோக்கியமாக போட்டி போடுங்கள். யார் மீதும் யாரும் பொறாமையுடன் போட்டி போடாதீர்கள் என்று அவர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தியதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். பல நாட்கள் தீர்க்க முடியாமல் நீண்டு வந்த பிரச்சினை ஒரே இரவில் தீர்ந்து போனது. இப்படி எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை எவ்வாறு அணுகுவது, எவ்வாறு தீர்வுக்கு கொண்டு வருவது என்பது அவருக்கு தெரியும்.

    நான் தி.மு.க.வில் இணைந்து பணியாற்றிய போது கட்சி நலன் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் எனது நலனில் தனிக்கவனம் செலுத்த அவர் தவறவில்லை. தேர்தல் பிரசார காலத்தில் ஒவ்வொருவருக்கும் பிரசாரம் செய்ய பயண திட்டங்கள் வகுத்து கொடுப்பார்கள்.

    அவ்வாறு எனக்கு வகுத்து கொடுத்த திட்டங்களை அவரே வாங்கி பார்த்துள்ளார். அதை பார்த்து விட்டு அவள் தொலைதூர இடங்களில் நான்கைந்து நாட்கள் பிரசாரம் செய்யட்டும். அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் சென்னையில் பிரசாரம் செய்யட்டும். அப்படியானால்தான் குடும்பம், குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டு பயண திட்டங்களில் அவ்வப்போது சென்னையிலும் வந்து பிரசாரம் செய்து செல்லும்படி வகுத்து கொடுப்பார்.

    இப்படி அடுத்தவர் சிரமங்களையும் புரிந்து செயலாற்றக்கூடியவர் அவர். எனக்கு அரசியல் ஆசை வந்ததற்கு சில காரணங்கள் உண்டு. நான் வெளியிட்ட சில கருத்துக்கள் தொடர்பாக பல வழக்குகள் என் மீது தொடரப்பட்டன. அந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. அந்த நேரத்தில்தான் நாமும் அரசியலில் ஈடுபட்டால் என்ன? அது தான் நமக்கு பக்கபலமாகவும், கேடயமாகவும் இருக்கும்  என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது.

    அதுபற்றி எனது கணவரிடம் தெரிவித்தேன். அவருக்கும் ஆச்சரியம். நீ அரசியலுக்கு போகிறாயா? உன்னால் சமாளிக்க முடியுமா? நன்றாக யோசித்துக் கொள் என்றார். அதை கேட்டதும் யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் என்றேன். அதற்கு அவர் சொன்னார். இந்த நேரத்தில் நீ அரசியலுக்கு சென்றால் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் அரசியலை நாடி இருப்பதாக கூறுவார்கள். எனவே வழக்கில் ஜெயித்து விட்டு அதன் பிறகு அரசியலுக்கு செல் என்றார். அதுவும் எனக்கு நன்றாகவேபட்டது.

    அடுத்த சில நாட்களில் அந்த நாளும் நெருங்கியது. வழக்கு விசாரணைகள் முடிந்து தீர்ப்பு வெளியான நாளில் நான் லண்டனில் இருந்தேன். தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது. உடனே அங்கிருந்து கலைஞரை  போனில் தொடர்பு கொண்டேன். “அப்பா, வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. நான் ஜெயித்து விட்டேன்” என்றேன். அவரும் வாழ்த்து சொன்னார். இப்போது நீ எங்கிருக்கிறாய் என்றார். லண்டனில் இருக்கிறேன். உடனடியாக சென்னை திரும்புகிறேன். நாளை உங்களை நேரில் சந்திக்கிறேன் என்றேன். அவ்வளவு தான். விமானத்தில் சென்னைக்கு பறக்க தயாரானேன்.

    அதன் பிறகு எப்படி திடீரென்று தி.மு.க.வில் இணைய முடிவு செய்தேன்? நடந்தது என்ன? என்பது பற்றிய இன்னும் பல தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    கண்ணீரை  துடைப்பதிலும்  நகைச்சுவை

    கலைஞருக்கு சைனஸ் பிரச்சினை உண்டு. எனக்கும் சைனஸ் உண்டு. இந்த பிரச்சினை இருப்பவர்களுக்கு காலையில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கும். எனவே நான் காலையில் எங்கு சென்றாலும் கையில் ஈரப்பதமுள்ள ‘டிஸ்யூ’ பேப்பர் வைத்திருப்பேன். கண்ணீர் வடிய வடிய துடைத்து கொள்வேன். அப்படித்தான் ஒருநாள் காலையில் கலைஞரை சந்திக்க சென்றபோதும் கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டே இருந்தேன்.
    கலைஞர் டிஸ்யூ பயன்படுத்த மாட்டார். மெலிதான வெள்ளை துண்டு வைத்திருப்பார். அவரும் அந்த துண்டால் அடிக்கடி கண்ணீரை துடைத்துக் கொண்டார். திடீரென்று சொன்னார் ‘சம்பந்தமே இல்லாமல் இருவர் கண்களிலும் கண்ணீர் வருகிறது. துடைத்து கொண்டிருக்கிறோம். இப்போது நம்மை பார்ப்பவர்கள் உணர்ச்சி பெருக்கால் இருவரும் கண்ணீர் சிந்துகிறார்கள் போலும் என்பார்கள்’ என்றார்.
    அதை கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது. இப்படித்தான், எவ்வளவு பெரிய பிரச்சினைகள் எழுந்தாலும் அதை சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பேசி சூழ்நிலையை இலகுவாக்கி விடுவார்.

    ttk200@gmail.com
    Next Story
    ×