search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய இணைய தள நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் விரைவில் இடம்பெறும் - ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்
    X

    மத்திய இணைய தள நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் விரைவில் இடம்பெறும் - ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்

    மத்திய இணைய தள நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் விரைவில் இடம்பெறும் என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். #MKStalin #TNassembly

    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மத்திய இணைய தள நூலகம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தொடங்கியுள்ள இணைய தள நூலகத்தில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல தென்னக மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் நூல்களும் இடம் பெறவில்லை.

    தெற்கு, வடக்கு என்று மாநிலங்களை பிளவு படுத்தும் வகையில் மத்திய அரசு நடந்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 3 லட்சம் எழுத்தாளர்கள் எழுதிய 1 கோடி நூல்கள் உள்ளன. தமிழக வரலாறு உள்ளது.

    இவையெல்லாம் இணைய தள நூலகத்தில் இடம் பெறவில்லை. ஆனால் வேறு நூல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிகளை புறக்கணித்து மத்திய அரசு சமஸ்கிருத துதி பாடுகிறது.

    தமிழக மக்களை இவ்வாறு புறக்கணித்த மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் பேசி இணைய தள நூலகத்தில் தமிழ்மொழி நூல்கள் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

    இதே கருத்தை வலியுறுத்தி சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேசினார். இதற்கு தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் அளித்த பதில் வருமாறு:-

     


    மத்திய அரசு இந்திய தேசிய இணைய தளத்தை தொடங்கி 5 நாட்கள் ஆகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் இடம் பெற வேண்டும். இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் அறிய வேண்டும் என்பதற்காகவே இதை தொடங்கியிருக்கிறார்கள்.

    தமிழ், குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 8 மாநில மொழி புத்தகங்கள் இதில் விரைவில் இடம் பெற உள்ளன. இந்த இணைய தளம் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் சவடேகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நாட்டில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் இந்த இணைய தள நூலகத்தில் இடம் பெறும் என்று கூறினார்.

    முதல் கட்டமாக இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருத நூல்கள் பரீட்சார்த்த முறையில் இடம் பெற்றுள்ளன. அனைத்து மொழிகளும் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் 149 தமிழ் அறிஞர்களின் 2 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் தமிழக அரசு உரிமம் பெற்றுள்ள 10 ஆயிரம் புத்தகங்கள்இந்த கணினி நூலகத்தில் இடம் பெறுகின்றன. இன்னும் 2 வாரத்துக்குள் இதற்கான வடிவமைப்புகள் நிறைவு செய்யப்பட்டு அனைவரும் படிக்கும் நிலை வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “கன்னி மாரா நூலகத்தில் உள்ள 10 ஆயிரம் புத்தகங்கள் இந்த இணைய தள நூலகத்தில் இடம் பெற செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது” என்றார். #MKStalin #TNassembly

    Next Story
    ×